தாத்தூர் கிருஷ்ணசாமி கவுண்டர் காலமானார்
தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்கத் தலைவரும், முன்னோடி விவசாயியுமான தாத்தூர் கிருஷ்ணசாமி கவுண்டர் வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
விவசாய பாரம்பரியத்தை கொண்ட தாத்தூர் கிருஷ்ணசாமி கவுண்டர் ஜூன் மாதம் நான்காம் தேதி 1935 ஆம் ஆண்டு ஆறுமுககவுண்டர் அங்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர். டிப்ளமோ படித்தவர். இவருக்கு தரணிபதி ராஜ்குமார், தனக்குமார், தனசேகர் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் தரணிபதி ராஜ்குமார் முன்னாள் சைமா தலைவராகவும், தற்போதைய சக்தி குழுமங்களின் செயல் இயக்குனராகவும் உள்ளார். கிருஷ்ணசாமி கவுண்டர் மனைவி கோவில்பாளையம் காளியண்ணன்புதூரைச் சேர்ந்த ஊர் கவுண்டர் சென்னியப்ப கவுண்டரின் மகள் கனகரத்தினம் ஆவார். கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் இருந்து வந்த கிருஷ்ணசாமி கவுண்டர் வெள்ளிக்கிழமை 1.15 மணிக்கு உயிரிழந்தார். தாத்தூர் கிருஷ்ணசாமி கவுண்டர் விவசாய பாரம்பரியத்தை கொண்டவராக இருந்ததால் தொடர்ந்து விவசாயிகள் நலனுக்காக வாழ்ந்து வந்தார்.
தேங்காய்க்கு கட்டுபடியான விலை வழங்க வேண்டும், தென்னை விவசாயிகளை அரசு பாதுகாக்க வேண்டும், கொப்பரை தேங்காய் களுக்கு பதிலாக உரிக்காத தேங்காய் ஆதார விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை அரசுக்கு கிருஷ்ணசாமி கவுண்டர் கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளுக்காக பலமுறை முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கலைஞர் ஆகியவரிடம் கோரிக்கை வைத்து வந்தார். மத்திய வேளாண்மை துறை அமைச்சர்களிடமும் விவசாயிகளுக்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
கிருஷ்ணசாமி கவுண்டர் உடல் தாத்தூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
No comments