Breaking News

மாசாணி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்





 ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிக்கிழமை குண்டம் இறங்கினர்.
 கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடந்தது. புதன்கிழமை 12ம் தேதி காலை ஆழியாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நிகழ்ச்சி நடைபெற்றது. 13ம் தேதி காலை குண்டம் கட்டும் முறைதாரர்கள் குண்டம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். 10 அடி அகலமும், 40 அடி நீளமும் உள்ள குண்டம் தயார் செய்யப்பட்டது. 13ம் தேதி மாலை ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகளில் சித்திரை தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டது. 14ம் தேதி திங்கட்கிழமை காலை குண்டம் பக்தர்கள் இறங்க தயார் செய்யப்பட்டது. குண்டம் இறங்க வரும் பக்தர்கள் ஆழியாற்றில் இறங்கி நீராடி, ஈர உடையுடன் ஆற்றங்கரையில் நின்றிருந்த அருளாளிகளிடம் குண்டம் இறங்க அனுமதி கேட்டனர். அருளாளிகள் திருநீர் கொடுத்து அனுமதி வழங்கியவுடன் குண்டம் இறங்கும் இடத்திற்கு சென்று வரிசையில் காத்துநின்றனர். குண்டத்தின் முன்பு சித்திரை தேரில் அம்மன் மலர் அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி தந்தார். காலை 8.30 மணியளவில் அம்மன் அருளாளிகள் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தவுடன் வானில் கருடன் மூன்று முறை வட்டமிட்டது. அதற்கு பிறகு அருளாளிகள் மலர் உருண்டையை குண்டத்தில் உருட்டிவிட்டனர். அது வாடாமல் இருந்தது. அதற்கு பிறகு எலுமிச்சை கனியை உருட்டி விட்டனர். அதுவும் வாடாமல் இருந்தது. அதற்கு பிறகு அருளாளிகள் சித்திரை தேரில் இருந்த அம்மனை பார்த்து வணங்கியபடியே குண்டம் இறங்கினர். குண்டம் விழாவை பார்வையிட வந்த பக்தர்கள் மாசாணித்தாயே என கோஷமிட்டனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கியவுடன் பெண்கள் கைகளால் மூன்று முறை பூ வை அள்ளி வீசி வணங்கினர். குண்டம் விழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்ததால்  நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எம்பிக்கள் ஈஸ்வர சாமி, கணபதி ராஜ்குமார் 
எம்எல்ஏக்கள் எஸ்பி வேலுமணி, பொள்ளாச்சி வி. ஜெயராமன்,  அறங்காவலர்குழுத்தலைவர் எஸ்.முரளிகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளா, மருதமுத்து, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, பொள்ளாச்சி முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், ஆனைமலை பேரூராட்சித்தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார், அதிமுக நிர்வாகிகள்  கார்த்திக்அப்புச்சாமி, மாசாணியம்மன் நற்பணி மன்றத்தலைவர் சாந்தலிங்க குமார், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments