Breaking News

பரம்பிக்குளம் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்



வால்பாறை சுற்றுப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் பரம்பிக்குளம் அணையிலிருந்து உபரிநீர் புதன்கிழமை வெளியேற்றப்பட்டது.
 பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் அதிக கொள்ளவு கொண்ட அணையாக இருப்பது பரம்பிக்குளம் அணை. இந்த அணை தனது முழு கொள்ளவான 17.82 டிஎம்சி நிறைந்துவிட்டால் ஒரு ஆண்டுக்கு பாசனத்திற்கும், குடிநீருக்கும் போதுமானதாக இருக்கும். இந்த பிஏபி திட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால் திட்டத்தில் உள்ள அனைத்து தொகுப்பு அணைகளும் நிரம்பிவிட்டது. பரம்பிக்குளம், ஆழியாறு போன்ற அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தென்மேற்கு பருவமழை காலம் முடிந்த பிறகு அணைகளில் இருந்து  உபரிநீர் வெளியேற்றப்பட்டது நிறுத்தப்பட்டது. அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைகள் ஒரு சில அடிகளுக்கு நீர் மட்டம் குறைந்தது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத்துவங்கியுள்ளதால் அணைகள் மீண்டும் நிரம்பியுள்ளது. பரம்பிக்குளம் அணை நிரம்பியதால் அணையில் இருந்து புதன்கிழமை மதகுகள் வழியாக 2500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு 3500 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.

No comments