வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சார்- ஆட்சியர் ஆய்வு
வால்பாறை பகுதியில் வால்பாறை நகரத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், முடிஸ் பகுதி மற்றும் சோலையாறு பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதில் வால்பாறை நகரப் பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்று மருத்துவர் பணியிடமும், முடிஸ் மற்றும் சோலையார் பகுதிகளில் தலா இரண்டு மருத்துவர் பணியிடங்களும் உள்ளன.
இதில் வால்பாறை நகரத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்று பணியிடங்களும் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. சோலையார் மற்றும் முடிஸ் பகுதியில் தலா ஒரு பணியிடம் காலியாக இருப்பதாக தெரிகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகத்தான் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு எளிமையான முறையில் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் கிடைக்கப்பெறுகிறது. ஆனால், இங்கு மருத்துவர் காலிப் பணியிடங்களால் அந்த வசதிகள் போதுமான அளவில் கிடைக்க பெறுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக வால்பாறை நகரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினசரி 80 முதல் 100 நோயாளிகள் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இங்கு மருத்துவப் பணியிடங்கள் காலியாக இருப்பதால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் பொறுப்புகளாக வால்பாறை நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் வந்து செல்கின்றனர். இதனால், கர்ப்பிணி பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் போதுமான ஆலோசனைகளும், சிகிச்சைகளும் கிடைக்கப் பெறுவதில்லை என்பது புகாராக இருந்து வருகிறது.
இதன் மீது நடவடிக்கை எடுத்து மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments