Breaking News

அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள் - 2024




அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருதுத் தேர்வுக்கான நடுவர் குழுக் கூட்டம் 17.09.2024 செவ்வாய்க்கிழமை அன்று அருட்செல்வர் மொழிபெயர்ப்பு மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
நடுவர்களாக, பேராசிரியர் பழனி. கிருஷ்ணசாமி, பேராசிரியர் க. பஞ்சாங்கம், மொழிபெயர்ப்பாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். நடுவர்களின் ஒருமித்த தேர்வாக பின்வரும் மொழிபெயர்ப்பாளர்கள் பரிசுக்கு உரியவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.  
முதல் பரிசு ரூ.2,00,000/- இரண்டு மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.                     (1) கே.ஆர். மீராவின் ‘ஆராச்சார்’ மலையாள நாவலை அதே தலைப்பில் மொழிபெயர்த்த      பேரா.மோ.செந்தில்குமார் (2) நாகாலாந்து எழுத்தாளர் அனுங்லா ஜோ லாங்குமர் உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் “கதவுகள் திறக்கப்படும் போதினில்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்த பேரா. ச. வின்சென்ட்(மணிப்பூர், அசாம் படைப்புகளையும் மொழிபெயர்த்துள்ளார்). 
இரண்டாம் பரிசு ரூ.50,000/- இருவருக்கு வழங்கப்படுகிறது. (1) கூகி வா தியாங்கோ எழுதிய “சிலுவையில் தொங்கும் சாத்தான்” என்ற கென்ய நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த அமரந்த்தா மற்றும் சிங்கராயர், (2) ஹருகி முரகாமி என்ற ஜப்பான் எழுத்தாளரின் “காஃப்கா கடற்கரையில்” என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள கார்த்திகைப் பாண்டியன்.
 மூன்றாம் பரிசு நான்கு மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தலா ரூ.25000/- வழங்கப்படவுள்ளது.                       (1) மஹ்முத் தர்வீஷ் அரபியில் எழுதிய கவிதைத் தொகுப்பை நேரடியாக “நாடோடிக் கட்டில்” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த பேரா. அ. ஜாகிர்ஹுசைன், (2) தஹர் பென் ஜெலூன் பிரெஞ்சில் எழுதிய நாவலை நேரடியாகத் தமிழில் “உல்லாசத் திருமணம்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்த சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர், (3) தரம்பால் எழுதிய கட்டுரைத் தொகுப்பை “அழகிய நதி” என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த B.R.மகாதேவன், (4) ஜார்ஜ் எல்.ஹார்ட் ஆங்கிலத்தில் எழுதிய ஆராய்ச்சி நூலை “தமிழ்ச் செவ்விலக்கியங்கள்” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த பு.கமலக்கண்ணன்.  
இவ்விருதுகள் அருட்செல்வரின் நினைவு நாளான அக்டோபர் 2ஆம் நாள் சென்னை அடையாறில் உள்ள டி.என்.இராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெறும் வள்ளலார் காந்தி விழாவில் வழங்கப்படும் என்று மொழிபெயர்ப்பு மையத் தலைவர் டாக்டர்.ம.மாணிக்கம், இயக்குநர் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் சி. இராமசாமி ஆகியோர் அறிவிக்கின்றனர்.

No comments