நீராறில் இருந்து கேரளாவிற்கு 4 மாதம் வழங்கும் தண்ணீரை நிறுத்தவேண்டும் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க கூட்டத்தில் தீர்மானம்
பிஏபி திட்டத்தில் நீராறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜனவரி வரை வழங்கும் தண்ணீரை நிறுத்தவேண்டும் என ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்கத்தின் கூட்டம் வியாழக்கிழமை சங்கம்பாளையம் வேதநாயகம் கலையரங்கில் நடைபெற்றது.பாசன சங்கத்தின் தலைவர் அசோக்குமார், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் முருகேசன், ஆழியாறு அணை திட்டக்குழுத்தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...ஆயக்கட்டு பகுதிகள் பல்வேறு உட்பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில் பழைய பாசன அட்டவணையே பயன்படுத்தப்பட்டுவருவதால் நீர்பங்கீட்டில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.பூமியை விற்பனை செய்தவர்கள் பெயரே நீர்பங்கீட்டு அட்டவணையில் உள்ளதால் புதிய நில உரிமையாளர் பெயர்களை சேர்க்கவேண்டும். பிஏபி திட்டத்தில் நீராற்றில் இருந்து அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை கேரள அரசு இடைமலையாறு அணை கட்டும் வரையே நீர் வழங்கினால் போதும் என்பதே ஒப்பந்தம். ஆனால், கேரளம் இடைமலையாறு அணை கட்டி பல ஆண்டுகள் ஆன பிறகும் தண்ணீர் தற்போதுவரை தமிழகம் வழங்கிவருகிறது. இந்த தண்ணீர் வழங்குவதை தமிழகம் நிறுத்தவேண்டும். வரும் 10 நாட்களில் அதாவது அக்டோபர் நீராற்றில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் வழங்குவதை இந்த ஆண்டாவது தமிழக அதிகாரிகள் நிறுத்தவேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் கிராம ஊராட்சிகள் வழியாக செல்லும் கால்வாய்களை தூர்வாருவதுபோல், பேரூராட்சி பகுதிகளில் உள்ள கால்வாய்களையும் தூர்வார வேண்டும். உபரிநீரை வீணாக்காமல் குளம், குட்டைகளுக்கு நிரப்ப வழிசெய்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும், திட்டக்குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கிளைக்கால்வாய்களில் உள்ள ஷட்டர்களை சீரமைக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments