உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அணை முழகொள்ளவை நெருங்கியது. பாலாற்றின் கரையோரம் வெள்ள அபாயம்
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீரும், மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் உருவாகும் காட்டாறுகள்,பாலாறு மற்றும் திருமூர்த்திமலை ஆறு ஆகியவற்றின் மூலம் பெறப்படுகின்ற தண்ணீரும் அணையின் முக்கிய நீராதாரங்களாகும்.
அதை ஆதாரமாகக் கொண்டு
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் திருமூர்த்திஅணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேலும் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடப்பாண்டில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடையவில்லை.
இதையடுத்து பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் 2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் திடீரென அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.இதன் காரணமாக பாலாறு,தோனி ஆறு உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் உபரி நீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகளும் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
60 அடி உயரம் கொண்ட அணையில் 58 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு காண்டூர் கால்வாய் மற்றும் பாலாற்றின் மூலமாக 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதே போன்று அமராவதி அணையும் கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.அதன் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கனமழை பெய்வதற்கான சூழல் நிலவி வருவதால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
No comments