Breaking News

வால்பாறை தொழிற்சங்கங்களின் போராட்டம் ஒத்திவைப்பு


வால்பாறை தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களின் போராட்டம் ஒத்திவைப்பு

தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் அமீது தகவல்
பொள்ளாச்சி, ஆக.16-வால்பாறையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்து வரும் தொழில் வரியை நீக்க வேண்டி தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற இருந்த தொடர் போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வால்பாறை அமீது தெரிவித்துள்ளார்.
 கோவை மாவட்டம், வால்பாறையில் முக்கிய தொழிலாக இருந்து வருவது தேயிலை தோட்ட தொழில். சிறிய மற்றும் பெரிய அளவிலான நூற்றுக்கும் அதிகமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதில் சுமாராக 30,000 மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தனியார் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.410 கூலியும், அரசு தோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு தினசரி ரூ.352 வழங்க்கப்படுகிறது. இந்த தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1600 தொழில் வரி இரண்டு தவனைகளாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழில் வரியை நீக்க வேண்டி தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. ஆனால், தேயிலை தோட்ட நிர்வாகங்கள் தொழில்வரியை நீக்கவில்லை. இதனால், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் வால்பாறையில் போராட்டமும், 23ஆம் தேதி கோவையில் போராட்டமும், 27 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தன. தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வரியை நீக்க கோரி மனுவும் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் தொழிற்சங்கங்கள் மற்றும் தேயிலைத் தோட்ட அதிபர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வால்பாறை வட்டாட்சியர் விஜயகுமார், வால்பாறை நகராட்சி ஆணையர் பாலு, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வால்பாறை அமீது, தேயிலை தோட்டங்களின் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு சார்- ஆட்சியர் வரும் ஜனவரி மாதம் வரை தொழில் வரி பிடித்தம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தேயிலைத் தோட்ட நிர்வாகத்திடமும் சார்-ஆட்சியர் இந்த தகவலை தெரிவித்தார். இதை தொடர்ந்து, வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது தெரிவித்தார்.

---

No comments