தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி,ஜூலை.13-
தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்னை விவசாயிகள் சார்பில் பொள்ளாச்சியில் புதன்கிழமைஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்பாட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள்..... பல்வேறு காரணங்களால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. ஆனால், தேங்காய் விலை மட்டும் தொடர்ந்து சரிந்து வருகிறது. வறட்சி நோய் தாக்குதல் மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு தேங்காய் விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கட்டுப்படியான விலை கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். ஆகவே தேங்காய் விலை சரிவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேங்காய் ஆதார விலை கொப்பரை கொள்முதலை 150 ஆக உயர்த்த வேண்டும். மேலும் அரசு ஆதார விலை கொப்பரை கொள்முதலை முறையாக செய்ய வேண்டும். தமிழக முழுவதும் கொப்பரை கொள்முதல நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 15 சதவீதம் மட்டுமே கொள்முதல் நடைபெறுகிறது. ஆகவே கொள்முதலை முறைப்படுத்த வேண்டும். பாமாயில் இறக்குமதியை தடை விதித்து தேங்காய் எண்ணெய் நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும். தென்னை மரத்திற்கான காப்பீடுகளை முறைப்படுத்த வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டி விவசாயிகள் வைத்து வரும் கோரிக்கையை புறக்கணிக்காமல் தென்னை நல வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். இதுபோன்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர்களின் நட்பமைப்பு, தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்கம் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ. தாமோதரன், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, பாஜக மாவட்டத்தலைவர் வசந்த ராஜன், பிஏபி நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் உட்பட பலர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்று பேசினார்.
எம் எல் ஏ பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று பேசியது மற்றும் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்...தமிழகத்தில் கரோனா உச்சகட்டத்தில் இருந்தபோதுகூட தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காலத்தில் உணவு விடுதிகள் இல்லாதபோதும் திருமண நிகழ்ச்சிகள் இல்லாதபோதும் தேங்காய் ரூ.20 வரை விற்பனையானது. ஆனால், கடந்த 20 ஆண்டுகள் இல்லாத விலை வீழ்ச்சி ஏற்பட்டு தற்போது தேங்காய் ரூ.6 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.3 க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் மட்டையும் தற்போது ரூ.40 பைசாவிற்கு விற்பனையாகிறது. இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. அதேபோல், கண்டெய்னர் வசதி இல்லாமல் தென்னைநார் பொருட்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதார விலை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டும் விவசாயிகளுக்கு பணம் முறையாக வழங்கப்படுவதில்லை. உக்ரைன் போர் மற்றும் பல்வேறு காரணங்களால் அனைத்து சமையல் எண்ணெய்களும் விலை உயர்ந்துள்ளது. மற்றும் பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் தேங்காய் எண்ணெய் விலையும் ,தேங்காயின் விலையும் மட்டும் குறைந்து வருகிறது. உடனடியாக தென்னை விவசாயிகள் பிரச்சனையில் தலையிட்டு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.விவசாயிகளுடன் எப்போதும் நாங்கள் துணை நிற்போம் என்றார்.
தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Reviewed by Cheran Express
on
July 13, 2022
Rating: 5
Reviewed by Cheran Express
on
July 13, 2022
Rating: 5
No comments