பிஏபி விவசாயிகள் ஒத்துழைப்பில்லாமல் ஒட்டன்சத்திரம் திட்டம் நிறைவேற்றப்படாது
பிஏபி விவசாயிகள் ஒத்துழைப்பில்லாமல் ஒட்டன்சத்திரம் திட்டம் நிறைவேற்றப்படாது
தமிழக அரசு வாக்குறுதி
பொள்ளாச்சி, ஜூலை.1-
ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் பிஏபி விவசாயிகள் ஒத்துழைப்பில்லாமல் நிறைவேற்றப்படாது என தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டது.
பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் நீர் பகிர்மானம் செய்துகொள்ளவேண்டும். ஆனால், ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டம், திட்டம் உருவாக்கப்பட்டபோது எதிர்பார்க்கப்பட்ட அளவு நீர் கிடைக்காததது போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சி தண்ணீர் கிடைப்பதில்லை. சராசரியாக ஒவ்வொறு ஆண்டும் 20 முதல் 24 டிஎம்சி வரை மட்டுமே தண்ணீர் கிடைத்துவருகிறது. ஒரு சில ஆண்டுகளில் 20 டிஎம்சிக்கும் குறைவாகவே கிடைத்துவருகிறது. இதனால், பிஏபி திட்டத்தில் உள்ள 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. இப்படி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் தண்ணீரை வைத்து முழுமையாக விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர். இந்நிலையில், பிஏபி திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதற்கு கோவை, திருப்பூர் மாவட்ட பிஏபி விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக 30 க்கும் அதிகமான அமைப்புகளை கொண்ட பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் உருவாக்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் கூட்டமைப்பு பொதுமக்கள் இணைந்து பெரிய அளவிலான போராட்டம் கடந்த 27ம் தேதி நடத்த அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் போராட்டத்தை கைவிடவேண்டியும், 1ம் தேதி தலைமைச்செயலகத்தில் அரசு சார்பில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை தலைமைச்செயலகத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சார்பில், திருமூர்த்தி நீர்தேக்கம் சார்பில் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு அணை விவசாயிகல் சார்பில் செந்தில், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில்ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், அரசு சார்பில் அமைச்சர்கள் பேசுகையில்... ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல பிஏபி விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பிஏபி விவசாயிகள் சார்பில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறுகையில், ஏற்கனவே பாசன பகுதிகளுக்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றால் பிஏபி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். இதையடுத்து, அரசு சார்பில் அமைச்சர்கள் கூறுகையில்....விரைவில் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கேரளத்துடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆகவே தற்போது தண்ணீர் எடுக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்து விவசாயிகள் கூறுகையில்... முதலில் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுங்கள் அதற்கு பிறகு ஒட்டன்சத்திரத்திற்கு ஆண்டுக்கு அரை டிஎம்சி தண்ணீர் எடுத்துசெல்லுங்கள் என்று தெரிவித்தனர். விவசாயிகளிடம் பேசிய அமைச்சர்கள் பிஏபி விவசாயிகளின் ஒத்துழைப்பு, சம்மதம் இல்லாமல் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்லமாட்டோம் எனதெரிவித்தனர்.
No comments