Breaking News

தற்கொலைகளை தடுக்க இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்


தற்கொலைகளை தடுக்க பள்ளிகளில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பயிற்சி

பொள்ளாச்சி, அக்.30-
தற்கொலைகளை தடுக்க பொள்ளாச்சி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பள்ளிகளில் பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவில் நீட்தேர்வு பயத்தில் கீர்த்திவாசன் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டத்தில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் பொள்ளாச்சி இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சென்று மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவது, மனச்சோர்வை போக்குவது குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பொள்ளாச்சி இந்திய மருத்துவர் சங்க நிர்வாகிகள் சரவணன், செந்தில், அமுதா, கவிதா ஆகியோர் பேட்டியளித்தனர்.
 பேட்டியில் தெரிவித்துள்ளதாவது...உயிரிழப்பு ஏற்படுவது விபத்துக்களால் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தற்கொலைகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்திய அளவில் தற்கொலைகளில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா, அதற்கு அடுத்த படியாக தமிழகத்தில் அதிக தற்கொலைகள் நடைபெறுகின்றன. தினசரி பல்வேறு காரணங்களுக்காக 36 பேர் வரை தமிழகத்தில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
 இதற்கு மன அழுத்தம், மனச்சோர்வு முக்கிய காரணமாக இருக்கிறது. மன அழுத்தத்தை போக்கிகொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. மன அழுத்தத்தை போக்க மருத்துவர்களையும் அனுகலாம். குடும்ப பிரச்சனைகள் போன்ற காரணத்திற்காக அதிக அளவு தற்கொலை நிகழ்கின்றன. மாணவர்கள் தற்கொலை செய்வது நிகழ்ந்துவருகிறது. எதிர்பார்த்ததை அடைய முடியாதபோது குழந்தைகள் மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். இதை சமாளிக்க குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே பயிற்சியளிக்கவேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இதை கற்றுத்தரவேண்டும்.  குழந்தைகளின் வாழ்வியல் திறனை மேம்படுத்தவேண்டும், பெற்றோர்கள் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும். மருத்துவர், பொறியாளர் என குறிப்பிட்ட துறைகளில் மட்டும் வெற்றிபெறவேண்டும் என நினைக்காமல் தங்களின் திறமைக்கு ஏற்ற துறையில் முன்னேறவேண்டும். ஒரு துறையில் வெற்றி வாய்ப்பை இழந்தால் அடுத்த துறையில் வெற்றிபெற முயற்சிசெய்யவேண்டும். தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் இதுபோன்ற பல்வேறு கருத்துக்களையும், பயற்சியையும் மாணவர்களிடத்தில் கொண்டுசேர்க்க பொள்ளாச்சி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பள்ளிகளில் பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.



No comments