மனிதர்களால் அழிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஊனுண்ணியின் கதை
இன்று தேசிய அருகிவரும் உயிரினங்கள் நாள் (National Threatened Species Day) என்று பலருக்கு தெரிந்திருக்கும். இந்த நாள் அனுசரிக்கபடுவதற்கு காரணமான பரிதாபமான உயிரினம் தான் தைலசின் (Thylacine). வயிற்றில் பை உள்ள (Marsupials) ஊனுண்ணி பாலூட்டிகளில் மிகப் பெரியவை இவையே. பை உள்ள ஊனுண்ணி பாலூட்டிகளான டாஸ்மேனியன் டெவில், நம்பேட், க்வல்-லிற்கு நெருங்கிய உறவினர் இந்த தைலசின்கள்.
வேறு பெயர்கள்
இவற்றின் முதுகின் பின்புறம் உள்ள கோடுகள் புலியை ஒத்திருப்பதால் டாஸ்மேனிய புலி (Tasmanian Tiger) என்றும், நாய் குடும்ப விலங்குகளை ஒத்த குணங்களை கொண்டிருப்பதால் டாஸ்மேனிய ஓநாய் (Tasmanian Wolf) என்றும் இவை அழைக்கப்படுகின்றன.
ஆஸ்திரேலிய மக்கள் இதனை நேநுப் புலி (Nannup Tiger) என்றழைக்கின்றனர். ஆஸ்திரேலிய அபராஜித பழங்குடி மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்த இந்த தைலசின்களை அம்மக்கள் கூரின்னா (Coorinna), கன்னுனா (Kannunnah), லோரினா (Loarinna), லகுன்டா (Lagunta), கபருனினா (Kaparunina) என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
தைலசின் என்ற கிரேக்க வார்த்தைக்கு நாய் தலையை கொண்ட பை உடைய உயிரினம் என்று பொருள்.
வாழிடம்
யூகலிப்டஸ் காடுகள், ஈரப்பதமுள்ள நிலங்கள் மற்றும் புல்வெளிகளில் உள்ள குகைகள் மற்றும் மர தண்டுகளே இவற்றின் வாழிடமாகும். ஒவ்வொரு தைலசினும் 40 முதல் 80 கி.மீ பரப்பளவை தம்முடைய எல்லையாக வைத்திருக்கும்.
உணவு
ஊனுண்ணிகளான இவை சிறிய கங்காரு, வல்லபி, வாம்பெட், ஒப்போசம் மற்றும் பறவைகளை உணவாக உட்கொள்ளும். ஆஸ்திரேலிய கண்டத்தின் முதன்மை ஊனுண்ணிகளான இந்த தைலசின்கள் அழிந்ததினால் அங்குள்ள மொத்த உணவுச்சங்கிலியுமே மாறியிருக்கும்.
உருவமைப்பு
தைலசின்கள் நாய் போன்ற தோற்றம் உள்ள விலங்குகள். இவற்றின் வால் கங்காருவை போன்று நேராக காணப்படும். இவற்றின் உடல் 100 முதல் 150 செ.மீ நீளமும், வால் 50 முதல் 60 செ.மீ நீளமும் கொண்டது. 60 செ.மீ உயரம் கொண்ட இவை 12 முதல் 22 கிலோ உடை வரை இருக்கும். உடல் முழுவதும் இளம் மஞ்சளினாலான முடியைக் கொண்டும், உடலின் பின்புறம் 13 முதல் 19 அடர்ந்த கோடுகளைப் பெற்றும் காணப்படும். இவற்றினால் தங்கள் வாயினை 90 டிகிரி வரை விரிக்க இயலும்.
பொதுவாக கங்காரு போன்ற பை உள்ள விலங்கினங்களில் பெண் விலங்குகள் மட்டுமே வயிற்று பையினை கொண்டிருக்கும். ஆனால் தைலசின்களில் ஆண் பெண் இரு விலங்குகளும் பையினை பெற்றிருக்கும். இந்தப் பையானது பெண் விலங்குகளில் குட்டியை பாதுகாக்கவும், ஆண் விலங்குகளில் இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாக்கவும் உதவுகிறது. உலகில் இதைப் போன்று ஆண் பெண் இரு விலங்குகளிலும் பை காணப்படுவது தென் அமெரிக்காவில் காணப்படும் நீர் ஒப்போசம்களில் மட்டுமே.
இனப்பெருக்கம்
1899ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் விலங்கியல் பூங்காவில் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்த தைலசினை வைத்தே, இன்றும் இவற்றின் இனப்பெருக்க முறையைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
பெரும்பாலும் குளிர் மற்றும் வசந்த காலங்களில் இவை இணை சேர்ந்து நான்கு இளம் குட்டிகளை ஈனுகின்றன. முடிகளற்றும், பார்வையற்றும் பிறக்கும் இளம் குட்டிகள் பிறந்த உடனே தாயின் வயிற்றுப் பைக்குள் சென்று விடுகின்றன. கங்காரு குட்டிகளை போன்று முழுமையாக வளர்ச்சி அடைந்த பின்னரே இவை வெளியில் நடமாட தொடங்குகின்றன.
இவற்றின் ஆயுட்காலம் காடுகளில் 5 முதல் 7 ஆண்டுகள். பாதுகாக்கப்பட்ட வாழிடங்களில் 9 ஆண்டுகள்.
பரிணாமம்
தைலசின்கள் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பூமியில் தோன்றியவை. ஆனால் இவற்றின் மூதாதையர்கள் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இப்பூமியில் உருவாகிவிட்டன. கிட்டத்தட்ட 12 தைலசின் சிற்றினங்கள் இப்பூமியில் இருந்தன. அவற்றில் எதுவுமே இன்று உயிருடன் இல்லை.
அழிந்ததற்கான காரணங்கள்
¶¶ ஆஸ்திரேலியா மற்றும் நியூகினியாவிற்கு ஆங்கிலேயர்கள் வருமுன்பே அங்கு தைலசின்கள் முற்றிலுமாக அழிந்து, டாஸ்மேனியாவில் மட்டும் வாழ்ந்து வந்தன. 1800களில் ஆங்கிலேயர்கள் டாஸ்மேனியாவிற்கள் நுழைந்தபோது அங்கிருந்த தைலசின்களின் எண்ணிக்கை 4000 முதல் 5000. அந்நேரத்தில் டாஸ்மேனியா அரசாங்கம் தைலசின் பரிசு வேட்டையை அறிவித்தது. ஒரு தைலசினின் விலை ஒரு ஆஸ்திரேலியன் டாலர். ஒரே ஒரு டாலருக்காக பெரும்பாலான தைலசின்கள் கொல்லப்பட்டன.
¶¶ இவற்றைத்தவிர ஐரோப்பிய காலனிவாதிகள் தைலசின்கள் ஆடு மற்றும் கோழிகளின் ரத்தத்தை உறிஞ்சுன்று கருதியதால் அதற்காகவும் பெருமளவில் கொல்லப்பட்டன. ஆனால் மிகவும் தனிமை விரும்பிகளான தைலசின்கள் மனிதர்கள் இருக்கும் இடத்தின் அருகில் நெருங்கக் கூட விரும்பவில்லை என்பதே உண்மை.
¶¶ ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட காட்டு நாய்களும் தைலசின்ளுக்கு பெரும் போட்டியாக அமைந்தன.
¶¶ ஆஸ்திரேலியாவின் பூர்வீக அபராஜித பழங்குடி மக்கள் இவற்றை உணவுக்காகவும் வேட்டையாடினர்.
¶¶ இதனைத் தவிர அந்நேரத்தில் நாய் குடும்ப விலங்குகளிடையே பரவிய டிஸ்டம்பர் நோயும் இவ்வினம் அழிய ஒரு காரணமாக அமைந்தது.
கடைசி உயிரினம்
1930ஆம் ஆண்டு காட்டில் வாழ்ந்த கடைசி தைலசின் ஒரு டாஸ்மேனியா விவசாயினால் சுட்டுக்கொல்லப்பட்டது.
இதனைத் தவிர டாஸ்மேனியாவின் ஹோபர்ட் விலங்கியல் பூங்காவில் கடைசியாக ஒரே ஒரு தைலசின் பராமரிக்கப்பட்டு வந்தது. 1936ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி மாலையில் பெஞ்சமின் என்றழைக்கப்பட்ட அந்த கடைசி உயிரினமும் இவ்வுலகை விட்டு மறைந்தது. இந்நாளே தேசிய அருகிவரும் உயிரினங்கள் நாளாக 1996 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பெஞ்சமின் இறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் தைலசின்களை பாதுகாக்கப்பட்ட உயிரினமாக டாஸ்மேனிய அரசாங்கம் அறிவித்தது.
கடைசி உயிரினம் இறந்த பின்பும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் தைலசின்கள் காடுகளில் மறைந்து வாழலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டே இருந்தனர். 1982ஆம் வருடம் தான் இதனை ஐயுசிஎன் அழிந்துபோன விலங்குகள் பட்டியலில் சேர்த்தது.
இன்றைய நிலை
இன்று நம்மிடம் கடைசி தைலசினின் 13 வீடியோ பதிவுகளும், சில புகைப்படங்களும், பதப்படுத்தப்பட்ட தோல்களும் உள்ளன.
1990 களில் தைலசின்களின் மரபணுவை டாஸ்மேனியன் டெவில் முட்டையுடன் சேர்த்து இவற்றினை மறுஉருவாக்கம் செய்யும் முயற்சியும், தைலசின்களின் முழுமையான மரபணுவை பிரிக்க முடியாத காரணத்தினால் தோல்வியிலேயே முடிந்தது.
1983ஆம் ஆண்டு அமெரிக்க கம்பெனி ஒன்று தைலசின் உயிருடன் இருப்பதை நிரூபித்தால் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்தது. அன்றிலிருந்தே பலரும் காடுகளில் தைலசின்களை தேடி வருகின்றனர். 1910ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 1200 பேர் தைலசின்களை பார்த்ததாக பதிவு செய்துள்ளனர். ஆனால் இவை எதுவுமே நிரூபிக்கப்படவில்லை.
இன்று டாஸ்மேனியா அரசாங்கம் வாகனப் பதிவெண் உட்பட தம்முடைய நாட்டின் பெரும்பாலான சின்னங்களில் தைலசின்களையே அடையாளமாக வைத்துள்ளது
இயற்கை அன்னையால் மட்டுமே உருவாக்க முடிந்த ஒரு உயிரினத்தை அழிப்பது எளிது. இன்று பெஞ்சமின் இறந்த 85வது நினைவு தினம். இது கொண்டாடப்பட வேண்டிய நாள் அல்ல... மனிதர்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாள்...
நன்றி...
Dr. Vanathi faizal,
Zoologist.
No comments