Breaking News

இந்தியா ஒரு ஒப்பற்ற காட்டுயிர் ஆய்வாளரை இழந்திருக்கிறது - ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் வருத்தம்


இந்தியா ஒரு ஒப்பற்ற காட்டுயிர் ஆய்வாளரை இழந்திருக்கிறது 

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் வருத்தம்
பொள்ளாச்சி.ஜூன்.1
இந்தியா ஒரு ஒப்பற்ற காட்டுயிர் ஆய்வாளரை இழந்திருக்கிறது என ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் காட்டுயிர்கள் குறித்து ஆய்வு செய்த ராம்குமார் கரோனா தொற்றுக்கு பலியானார்.
 இது குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு ஒப்பற்ற காட்டுயிர் ஆய்வாளரை இழந்திருக்கிறது. இந்திய வன உயிரின அறக்கட்டளையின் (WTI) முன்னணி ஆய்வாளரான முனைவர் இராம்குமார்  காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் தந்துள்ளது.

கொரானாவின் பெரும் பிடியில் அவரும் சிக்கிக் கொண்டார். அவரின் மறைவு இந்திய காட்டுயிர் காவலர்களுக்கான பேரிழப்பாகும். டபிள்யு . டி. ஐ.நிறுவனமும் இந்திய அரசின்  யானைகள் திட்டமும் (புராஜெக்ட் எலிபெண்ட்)  இணைந்து  இந்தியா முழுவதும் உள்ள யானைகளின்.  வலசைப்பாதைகளை கண்டறிந்து ஆவணப்படுத்திய பணியில்  முக்கிய பங்காற்றியவர். 

அதுவே ரைட் ஆஃப் பேசேஜ்  எனும் ஆவண நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூலில் இடம்பெற்றுள்ள 108 வலசை பாதைகளின் வரைபடங்களையும்
 ஆவணப்படுத்தியதில்
இராம்குமாரின் பங்களிப்பு உள்ளது.   

அவரின்  சொந்த ஊர் சீர்காழி . மயிலை ஏவிசி கல்லூரியில் வன உயிரின அறிவியலில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். கோவை வனக் கோட்டத்தின் நில அமைப்பு, யானைகளின் வாழ்விடம், வலசை பாதைகள், யானை மனிதன் முரண்பாடு ஆகியவை உள்ளடக்கிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.  ஜிஐஎஸ் (GIS) எனப்படும் நவீன தொழில்நுட்பத்தை கையாள்வதில் வல்லமை கொண்டவர். 

இந்திய வன உயிரின அறக்கட்டளை , இந்தியாவில் உள்ள யானைகளின் வலசை பாதைகளை காப்பாற்றுவதில் பெரும் பணியாற்றுகிறது.  தனியார் வசமுள்ள ,சில வலசைப் பாதைகளை விலை கொடுத்து வாங்கி அதனை யானைகளுக்காக மீட்டுக்கொடுக்கும்  பணியை அவ்வமைப்பினர் செய்து வருகின்றனர். அவ்வாறு கேரளாவின் வயநாடு பகுதியிலும் கர்நாடகாவிலும் சில  வலசைப் பாதைகள் மீட்டெடுக்கப்பட்டன.  

அந்த பாதைகளை மீட்டெடுப்பதில் ராம்குமார் பங்களிப்பு மிக முக்கியமானது. களத்திலிருந்து பணியாற்றி அதனை சாத்தியமாக்கினார்.   கடின உழைப்பாளி. இரவு முழுவதும் விழித்திருந்து பணியாற்றுவார். டெல்லியில் பல ஆண்டுகளாக இருந்து இந்தியா முழுவதற்குமான  காட்டுயிர்கள் தொடர்பான பல ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். நாடு முழுதும் உள்ள பல காட்டுயிர் பாதுகாப்பு அமைப்புகளோடும்  அறிஞர்களோடும் தொடர்போடு இருந்தவர். பட்டமேற்படிப்பு முடித்து WWF டபிள்யு டபிள்யு எப் நிறுவனத்தில் பணியாற்றும் ஓசை அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு மாநாடு வெற்றிகரமாக அமைந்ததில்  அவருடைய பங்களிப்பு ஈடு இணையற்றது. காட்டுயிர்கள் கணக்கெடுப்பு,  ஆய்வுப்பணிகள் விழிப்புணர்வு பணிகள் என கடந்த 16 ஆண்டுகளாக அவரோடு இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதவை.  

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கோவை வந்து அரைநாள் இருந்து யானைகள் வலசை பாதைகள் தொடர்பாக ஓசை செய்ய வேண்டிய பணிகள் பற்றி  ஆலோசனை கூறி சென்றார். அதன் பின்னர் அவரை திரும்பவும் பார்க்க மாட்டோம் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சோகம்.  பழகுவதற்கு இனிய பண்பான மனிதர்.  எனக்குத் தெரிந்து அவர் யாரிடமாவது கடிந்து பேசிப்  பார்த்ததில்லை. 
முதன்முறையாக ஒருவர் அவருக்கு அறிமுகமானாலும்  அவருடைய நட்பு வட்டத்தில் இணைத்துக் கொள்வார். அத்தகைய பண்புள்ளவர். தமது 43 வயதில் பல நூறு மனிதர்களை ஆட்கொண்ட ஒரு நண்பரை, அறிவியலாளரை இழந்து நிற்கிறோம். எமக்கு மட்டுமல்ல காட்டுயிர்கள் மீது அக்கரை கொண்ட அனைவருக்கும்  ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

புட்நோட் ...உயிரிழந்த காட்டுயிர் ஆய்வாளர் ராம்குமார்.

No comments