Breaking News

40 அடி உயர பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு 3 பேர் காயம்


40 அடி உயர பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து 

ஒருவர் உயிரிழப்பு 3 பேர் காயம்
 பொள்ளாச்சி, ஜூன்.29-
பொள்ளாச்சி அருகே 40 அடி பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

 கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(34), விளம்பர ஏஜென்சியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு சமீபத்தில் பெரிய விளம்பரம் ஒன்று கிடைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுடன் பொள்ளாச்சி வந்து தங்கும் விடுதியில் அறை எடுத்து ஸ்ரீகாந்த் மது அருந்தியதாக தெரிகிறது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தனது சொகுசு காரை எடுத்துக்கொண்டு பொள்ளாச்சியிலிருந்து வடக்கிபாளையம் சாலையில் சென்றுள்ளனர். பொன்னாபுரம் பிரிவு வரை சென்றுவிட்டு மீண்டும் காரில் திரும்பி பொள்ளாச்சி நோக்கி வந்துள்ளனர். அப்போது காரை அதிவேகமாக ஓட்டியதாக தெரிகிறது. இதில் கார் வடக்கிபாளையம் பிரிவு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் பாலத்தில் இருந்து 40 அடி பள்ளத்தில் கீழே விழுந்தது. இதில் ஸ்ரீகாந்த் (34) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் சென்ற பொள்ளாச்சி மகாலட்சுமி நகரை சேர்ந்த கோபிநாத்(26), கோவை சபரிபாளையத்தை சேர்ந்த கவுசிக்(26), கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திக் கண்ணன்(27) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் 3 பேரும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் ஏர் பேக் ஓபன் ஆகியதாக தெரிகிறது. இதில் 3 பேரும் உயிர்தப்பினர். ஸ்ரீகாந்த் சீட் பெல்ட் அணிய வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏர்பேக் ஒப்பன் ஆகாமல் அவர் மட்டும் உயிரிழந்தார். மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சண்முகசுந்தரம் என்பவரின் வீட்டு முகப்பில் கார் விழுந்துள்ளது. ஆனால் அவர்கள் வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் லேசாக சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments