Breaking News

ஆழியாற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிப்பு-கண்டுகொள்ளாத கேரள மின் வாரியம்


ஆழியாற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிப்பு

கண்டுகொள்ளாத கேரள மின் வாரியம்

பொள்ளாச்சி. ஏப்.20.
ஆழியாறு மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி ஆனைமலை, கோட்டூர், மலையாண்டிபட்டினம் அம்பராம்பாளையம், மணக்கடவு, மூலத்துறை, சித்தூர் வழியாக சென்று அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆறு தமிழகத்தில் ஆழியாறு என்ற பெயரில் பயணித்து கேரள மாநிலம் மூலத்தரா அணையை அடைந்து அங்கிருந்து சித்தூர் பகுதியை சென்றவுடன் பாரதப்புழா என்று பெயர் மாறி அழைக்கப்படுகிறது.
 இந்த பாரதப்புழா ஆறு அரபிக்கடலில் இறுதியாக சென்று சேருகிறது.
 இந்த ஆழியாறு ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் ஓடும் நதியாக உள்ளது.
 தமிழகத்தில் 50 ஆயிரம் ஏக்கருக்கும், கேரளத்தில் பல ஆயிரம் ஏக்கருக்கும் பாசன வசதிக்கு பயன்படுகிறது.

 மேலும் தமிழகத்தில் கோவை, திருப்பூர் இரண்டு மாவட்டங்களுக்கும், கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்திற்கும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இப்படிப்பட்ட ஆழியாறில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் ஓடுவதால் ஆழியாற்றில் இயற்கையாகவே மீன் வளமும் உள்ளது.
 பல்வேறு வகையான மீனினங்கள் ஆழியாற்றில் வாழ்ந்து வருகின்றன.

 இப்படிப்பட்ட ஆழியாற்றில் விற்பனைக்காகவும், சொந்த பயன்பாட்டிற்காகவும் மீன்கள் பிடிக்கப்படுகிறது. மீன் பிடிப்பவர்கள் வலைகளை பயன்படுத்தியும், தூண்டில் போட்டும் மீன் பிடிக்கின்றனர். ஆனால், கேரளா மாநிலத்தில் மூலத்துறை அணைதொடங்கி பல கிலோமீட்டர் தொலைவிற்கு குண்ணங்காட்டுபதி தடுப்பணை வரை மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்கும் முறை கடந்த ஓராண்டாக அதிகரித்துள்ளது.

 ஆற்றின் கரையோரங்களில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் மோட்டார் உள்ள பகுதிகளில் இருந்து மின் இணைப்பு எடுத்து தண்ணீரில் நேரடியாக மின்சாரத்தை பாய்ச்சி மீன்களை கொன்று பலர் பிடித்து வருகின்றனர்.
 இதனால், இந்த பகுதிகளில் மீன்வளம் குறைவடைகிறது. சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை உயிர் இழந்து விடுவதால் ஆற்றில் மீன் வளம் குறைந்து வருகிறது.
 மேலும் தண்ணீரில் வசிக்கும் பல்வேறு வகையான உயிரினங்களும் உயிரிழந்துவிடுகிறது.
இது தவிர மின்சாரம், சட்டத்தை மீறி பயன்படுத்தப்படுகிறது. இதை கேரள மின்வாரியம் கண்டு கொள்வதே இல்லை.இதுபோன்று சட்டத்திற்குப் புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


No comments