Breaking News

ஆனைமலை மாசாணியம்மனுக்கு நள்ளிரவில் மயான பூஜை

 

ஆனைமலை மாசாணியம்மனுக்கு நள்ளிரவில் மயான பூஜை

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி, பிப்.25
 
 

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி,
புதன்கிழமை நள்ளிரவில் மயான பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
 
 கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை புதன்கிழமை நள்ளிரவில் நடந்தது. 
 

இதையொட்டி, நள்ளிரவு 12.30 ம ணிக்கு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்படபல  அருளாளிகள் அம்மன் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு சென்றனர்.

அங்கு எட்டு அடி நீளத்துக்கு மயான மண்ணால் மாசாணியம்மனின் உருவம் சயனகோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளி ஆற்றில் நீராடிவிட்டு தீர்த்தம் எடுத்துவந்தார். அதிகாலை 2.30 மணிக்கு பம்பை மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டு, அம்மன் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. எலுமிச்சை மாலைகளால் அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

 
பின் பம்பைக்காரர்கள் பக்தி பாடல்களை பாடினர். அருளாளிக்கு அருள் வந்து, அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்பு துண்டை வாயில் கவ்விக்கொண்டு கையில் சூலாயுத்ததுடன் ஆவேமாக நடமாடினார். ஆடிக்கொண்ட அம்மன் உருவத்தை சிதைத்தார்.

 அப்போது, அம்மனின் கழுத்துப்பகுதியில் இருந்து பிடிமண் எடுக்கப்பட்டது. மயான பூஜை பின்னிரவு 2.45 மணிக்கு முடிவடைந்தது. பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பலர் அருள் வந்து ஆடினர். வியாழக்கிழமை காலை ஆழியாற்றங்கரையில் கோயில் தலைமை குருக்கள் கும்பஸ்தாபனம் செய்தனர். 
 

அம்மன் உருவத்தின் கழுத்துப்பகுதியில் இருந்து மீண்டும் மண் எடுக்கப்பட்டு சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோயில் மூலஸ்தானத்தில் வைத்தனர். நிகழ்ச்சியில் ஆனைமலை முன்னாள் பேரூராட்சித்தலைவர் சாந்தலிங்ககுமார், கோவை உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் அருண்பிரகாஷ், பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் நீலகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். 
 
பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் 150க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வரும் 26ம் தேதி சித்திரை தேர் வடம்பிடித்தலும், குண்டம் கட்டுதலும், இரவு குண்டம் வளர்த்தலும் நடைபெறும். 27ம் தேதி காலை 7.30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெறவுள்ளது.

----




No comments