திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
பொள்ளாச்சி, பிப்.20
திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதியளித்தார்.
உங்கள் தொகுதியில்
ஸ்டாலின் என்ற திமுக கூட்ட நிகழ்வு பொள்ளாச்சி-ஆச்சிபட்டியில் சனிக்கிழமை
நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை
வகித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின் பொதுமக்களை அருகில் சென்று சந்தித்தார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதற்கு பிறகு திருக்குறளில் சிறந்து விளங்கிய சிறுவன் மற்றும் சமூக சேவை, புதிய கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
அதற்கு
பிறகு பொதுமக்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் குறைகளை
கேட்டறிந்துவிட்டு திமுக ஆட்சிக்குவந்தவுடன் குறைகள் சரிசெய்யப்படும் என
தெரிவித்தார்.
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியது...
பொதுமக்கள்
சார்பில் வழங்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்திற்கும் திமுக
ஆட்சிக்கு வந்தவுடன் தீர்வு காணப்படும். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருகிறது. பெண்கள் மீது
தாக்குதல், பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சு என பெண்களுக்கு பாதுகாப்பு
இல்லாத சூழல் உருவாகியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு
பொள்ளாச்சிதான் உதாரணம்.
பொள்ளாச்சி என்றால் இருந்த மரியாதை போய் பொள்ளாச்சி என்றால் வெட்கப்படவேண்டிய அளவிற்கு பொள்ளாச்சியின் நற்பெயர் அதிமுகவினரால் கெட்டுவிட்டது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, கலைஞர் மகளிர் சுய உதவிக்குழுக்களை துவக்கினார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மேல் தனிக்கவனம் செலுத்தப்பட்டது.
ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் மகளிர் சுய உதவி
குழுக்களின் நோக்கமே சிதைக்கப்பட்டுவிட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்கள்
சரியாக செயல்படவில்லை. திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுய
உதவிக்குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவை மீண்டும் சிறப்பாக
செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், மகளிர் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு
வங்கிகளில் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
பெண்கள்
நாட்டின் கண்கள். அவர்கள் பாதுகாக்கபடவேண்டியவர்கள். ஆனால், அதிமுக
ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பொள்ளாச்சி பாலியல்
வழக்கில் அதிமுகவினருக்கு தொடர்பு இல்லை, ஆதாரம் இருந்தால்
காண்பியுங்கள் என முதல்வர் தெரிவித்துவந்தார். ஆனால், தற்போது அதிமுக
நிர்வாகி அருளானந்தம் சிபிஐ யால்கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், வழக்கில் தொடர்புடைய பல அதிமுக ராஜாக்கள் தற்போது அதிகாரத்தை பயன்படுத்தி தப்பிவருகின்றனர். வழக்கில் தொடர்புடைய பலரை அதிமுக முக்கிய நபர்கள் காப்பாற்றிவருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில்
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் குற்றவாளிகளை பிடித்து சென்று
காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனால், போலீஸார் அவர்களை கைது செய்யாமல்
விடுவித்துவிட்டனர்.அதற்கு பிறகு பார் நாகராஜ் பாதிக்கப்பட்ட பெண்ணின்
சகோதரை தாக்கியுள்ளார். பிரச்சனை பெரிதாகவே போலீஸார் மூன்று பேரை கைது
செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை கைது செய்யவில்லை.
நான் அறிக்கை விட்ட பிறகுதான் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.
பாலியல் வழக்கில் தடயங்களை மறைக்கவும், அழிக்கவும் சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் குறித்த
தகவலை மிரட்டும் நோக்கில் காவல்துறையினர் வேண்டுமென்றே வெளியிட்டனர்.
சிபிஐ வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வார்கள் என நம்புகிறோம். ஆனால்,
தொடர்புடையவர்களை கைது செய்யவில்லை என்றால் திமுக ஆட்சி அமைந்தவுடன் கைது
செய்யப்படுவார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத
இதுபோன்ற நிலையை மாற்ற பொதுமக்கள் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி
பெறச்செய்ய வேண்டும். திமுக ஆட்சியில்பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்
என்றார்.
நிகழ்வில், திமுக நிர்வாகி சேனாதிபதி, முன்னாள்
அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, பொள்ளாச்சி
நகரப்பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
---




No comments