Breaking News

ரூ. 3 கோடிக்கு புலித்தோல் விற்க முயன்ற ஆறுபேர் கைது

 

ரூ. 3 கோடிக்கு புலித்தோல் விற்க முயன்ற ஆறுபேர் கைது
 

பொள்ளாச்சி, பிப்.3
 
 பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூரில் ரூ.3 கோடிக்கு புலித்தோல் விற்க முயன்ற  ஆறுபேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
 
 

பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் பகுதியில் சிலர் புலித்தோல் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்ட கண்காணிப்பு நடைபெற்றது. 
 
 இந்நிலையில், வேட்டைக்காரன்புதூர் பகுதியில்
செவ்வாய்க்கிழமை மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர் புலித்தோல் விற்க முயன்றவர்களிடம் தங்களை புலித்தோல் வியாபாரிகள் என்று கூறியுள்ளனர். புலித்தோலை மாறு வேடத்தில் சென்ற வனத்துறையினர் விலைக்கு வாங்குவதுபோல் நடித்து விலை கேட்டுள்ளனர். 
 

புலித்தோல் இருப்பதாக கூறி ஆறுபேர் கும்பல் ரூ.3 கோடி விலை கூறியுள்ளனர். புலித்தோலை காண்பிக்காமல் அதன் புகைப்படத்தை மட்டும் காண்பித்துள்ளனர். பணத்தை காண்பித்தால்தான் புலித்தோலை காண்பிக்கமுடியும் என தெரிவித்துவிட்டனர். 
 
இதனால், வனத்துறையினர் மாறுவேடத்திலேயே வேட்டைக்காரன்புதூரில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டனர். இந்நிலையில், புதன்கிழமை மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர்
பணம் கொண்டுவந்திருப்பதாகவும், புலித்தோலை கொண்டுவருமாறும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வேட்டைக்காரன்புதூர் அழுக்குச்சாமி கோயில் அருகே அசோக்நகர்
பகுதிக்கு வருமாறும் அங்கு ஒரு காரில் புலித்தோலுடன் காத்திருப்பதாகவும் ஆறுபேர் கும்பல் தெரிவித்தது.
 
 இதையடுத்து, வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையிலான வனத்துறையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். அங்கு இருந்த காரில் சோதனையிட்டபோது, அதில் புலித்தோல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. புலித்தோலை விற்க முயன்ற காரில் இருந்த  உதயகுமார்(31), பிரவீன்(26), ரமேஷ்குமார்(30), மணிகண்டன்(36), சபரிசங்கர்(27), மயில்சாமி(60) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். 
 
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட ஆறு நபர்களில் ஒருவரான மயில்ச்சாமி வேட்டைக்காரன்புதூரைச்சேர்ந்த ஒரு தோட்டத்து உரிமையாளர்  வீட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு இருந்ததாகவும், அவர்கள் வீட்டில் வைத்திருந்த புலித்தோலை திருடிவைத்துக்கொண்டு தற்போது விற்பனையில் ஈடுபட முயற்சித்ததாகவும் தெரியவந்ததுள்ளது.

----


No comments