Breaking News

கொப்பரைக்கு பதிலாக தேங்காய்க்கு ஆதரவு விலை வேண்டும்-தென்னை விவசாயிகள் கோரிக்கை

கொப்பரைக்கு பதிலாக தேங்காய்க்கு ஆதரவு விலை வேண்டும்


தென்னை விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சி

 தேங்காய் விலை சரிவை தடுக்க கொப்பரைக்கு பதிலாக தேங்காய்க்கு ஆதரவு விலை நிர்ணயிக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 
 

தமிழகத்தில் 4 லட்சம் ஹெக்டேரில் 12 கோடி தென்னை  மரங்கள் உள்ளன. அதில் குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டேரில் 1.5 கோடி தென்னை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருந்தாலும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களின் தேங்காய்க்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. தென்னை மரங்கள் நீண்ட கால பயிராகும்.

 வெள்ளை ஈ தாக்குதல் ,காண்டாமிருக வண்டு தாக்குதல் என பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு இடையே இந்த தென்னை மரங்களில் விளையும் தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் மிகப்பெரிய குறையாக இருந்துவருகிறது.
 
 தேங்காய் விலை சரிவை தடுத்த தேங்காய் கொப்பரைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவு விலையாக கடந்த 2013ம் ஆண்டுக்கு முன்பு ரூ.51 நிர்ணயித்து கொப்பரைகளை கொள்முதல் செய்தது. அதற்கு பிறகு 52.50 ஆக விலையை உயர்த்தியது. 
 

தற்போது இந்த ஆதரவு விலை ரூ.95.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 ஆனால், கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்துவதை விட தேங்காய்க்கு ஆதரவு விலை நிர்ணயித்தால்தான் விவசாயிகளுக்கு நேரடியாக பயனுள்ளதாக இருக்கும். எப்படியென்றால், தேங்காயில் இருந்து கொப்பரையை உருவாக்க தேங்காய் மட்டைகளில் இருந்து தேங்காயை பிரித்து, தேங்காயை உடைத்து அதை உலர வைத்து கொப்பரைகளாக மாற்றவேண்டும். 
 
இதற்கு விவசாயிகளுக்கு உலர் கலன்கள் அவசியமானதாகும். ஒவ்வொரு விவசாயியும் உலர்கலன்கள் அமைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். தென்னை விவசாயகளில் 98 சதவீதம் பேருக்கு உலர்கலன் இல்லை என்பது குறிப்பிடத்தக்காகும். இதனால், விவசாயிகள் தேங்காய்களை வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிடுகின்றனர். 
 
தேங்காய்களை வாங்கு வியாபாரிகள் தங்களிடம் உள்ள உலர்கலன்கள் மூலம் உலர வைத்து அதிக விலைக்கு கொப்பரையை விற்று விவசாயிகளுக்கு சேரவேண்டிய லாபத்தை அவர்கள் பெற்றுவிடுகின்றனர். இதனால், கொப்பரைக்கு பதிலாக தேங்காய்க்கு அரசு ஆதரவு விலை நிர்ணயித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 
 தென்னை விவசாயிகள் கூறுகையில், அனைத்து விவசாயிகளும் தேங்காயை கொப்பரையாக மாற்ற உலர்கலன்கள் அமைக்க பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாமல் போகிறது. ஆகவே கொப்பரைக்கு பதிலாக தேங்காய் ஆதரவு விலை நிர்ணயித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.



 

No comments