Breaking News

முழுமையாக முடங்கிய நீராபானம் உற்பத்தி

முழுமையாக முடங்கிய நீராபானம் உற்பத்தி
 

 உலக அளவில் இந்தியா, இந்தோநேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, மலேசியா உள்ளிட்ட  93 நாடுகளில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது.  இந்தியாவில் தொன்மையான கலாச்சாரத்துடன் இணைந்த பயிராக தென்னை உள்ளது. உலக அளவில் தென்னை விவசாயம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கர்நாடகா, கேரளா, தமிழகம், ஆந்திரா ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகம். 

 

இந்தியா முழுவதும் 18.95 லட்சம் ஹெக்டேர்கள் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. இதில் 16 ஆயிரத்து 940 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  தமிழகத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை விவசாயம் உள்ளது. 

 

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஒன்றரை கோடி தென்னை மரங்கள் உள்ளன.
 நீண்டகால பயிரான தென்னை விவசாயத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் இருப்பதுதான். அவ்வப்போது விலை உயர்வதும் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் விலை குறைந்து இருப்பதும் தென்னை விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. 
 

இந்த பிரச்சனையை சரி செய்ய நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி கேட்டு விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீராபானம் இறக்க அனுமதி அளித்தார். தமிழகத்தில் 11 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் நீராபானம் இறக்குவதற்கு அனுமதி பெற்றுள்ளனர். 
 
அதில் ஆறு தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே நீராபானம் இறக்கி விற்பனை செய்து வந்தனர். 

 

கோவை மாவட்டத்தில் கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் , விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், ஆனைமலை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய மூன்று உற்பத்தியாளர் நிறுவனங்கள் நீரா பானம் இறக்கி வந்தன. இந்த ஆறு தென்னை உற்பத்தி நிறுவனங்களும் சுமார் தினசரி 750 முதல் 1,000 லிட்டர் நீராபானம் இறக்கி நீரா பானத்தை நேரடியாக விற்பனை செய்தும், சர்க்கரை உற்பத்தி செய்வது ,  தேன் உற்பத்தி செய்தும் வியாபாரம் செய்து வந்தனர். 

 இந்நிலையில் கொராேனா வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், விவசாயிகளின் கனவு திட்டமான நீராபானம் இறக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நீரா பானத்தை இறக்கி விற்பனை செய்வதில் பிரச்சனைகள் இருந்ததால் நீரா பானம் இறக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நீராபானம் இறக்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், அதை விற்பனை செய்பவர்கள் விவசாயிகள் ஆகியோர் பாதிப்படைந்துள்ளனர்.
 
 

ஏற்கனவே நீராபானம் இறக்கினாள் அதை பதப்படுத்தி கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு போதுமான தொழில்நுட்பங்கள் இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக நீராபானம் இறக்கும் தொழில் முற்றிலுமாக முடங்கிப் போனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 
 விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாகி பத்மநாபன் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நீராபானம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால், நீராபானம் இறக்கும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு அரசு உதவவேண்டும் என்றார்.


 

No comments