ஹோட்டல் சாம்பாரில் இறந்து கிடந்த குட்டி எலி: உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை

கோவை அரசு மருத்துவமனையில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த திவ்யா என்பவரது சகோதரர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள ஓர் உணவகத்தில் ஆப்பம், சாம்பார் வாங்கிச் சென்றுள்ளார். சாம்பார் பொட்டலத்தைப் பிரித்து, ஆப்பத்தில் ஊற்றி சாப்பிட முற்பட்டபோது, அதில் எலிக் குட்டியின் சடலம் கிடந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த திவ்யா, எலி கிடந்த சாம்பாருடன் சென்று, ஹோட்டல் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார். அப்போது கடைக்காரருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த புகாருக்குப் பிறகு, ஹோட்டல் சாம்பார் முழுவதையும் ஹோட்டலுக்குப் பின்புறமுள்ள வாலாங்குளத்தின் கரையில் கொட்டியுள்ளனர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் கூறும்போது, “ஹோட்டலில் உணவு தயாரிக்கும் இடம் முழுவதும் ஆய்வு செய்தோம். புகார்தாரர், கடைக்காரர் ஆகியோரிடமும் விசாரணை செய்துள்ளோம். இதனடிப்படையில் கடைக்கு நோட்டீஸ் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றனர்.
No comments