Breaking News

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவப் படிப்பு கனவானது

 

பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி செம்பாகவுண்டர் காலனி, மகாத்மா காந்தி வீதியில் வசித்து வந்தவர் முருகன். மில் தொழிலாளியான இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்து விட்டார். இவரது இரண்டாவது மகன் யுவன்ராஜ் (18), கடந்த ஆண்டு சமத்தூரில் உள்ள வாணவராயர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்துள்ளார். பொதுத் தேர்வில் 600 – க்கு 445 மதிப்பெண்களும், நீட் தேர்வில் 155 மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும் மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 450 –வது இடமும் பெற்றுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் முடிந்து விட்டதால், கன்னியாகுமாரியில் உள்ள மூகாம்பிக்கை மருத்துவ கல்லூரி மற்றும்  திருவள்ளுவரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மேட் ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு ரூபாய் 4 லட்சத்துக்கு மேல் செலவாகும் என தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த யுவன்ராஜால் அவ்வளவு கட்டணத்தை செலுத்த முடியாது என்பதால் சொந்த ஊருக்கு திரும்பியவர். தற்போது கேட்டரிங் பணிக்கு சென்றுக் கொண்டுள்ளார். யுவராஜின் தாய் சுமிதா வீட்டில் உள்ளார். அவரது மூத்த மகன் ஆதிராஜ் (19 ) பொள்ளாச்சியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிக்கு செல்கிறார். இளைய மகன் கணேஷ் பிளஸ்-1 படித்து வருகிறார்
இது குறித்து யுவன்ராஜ் கூறியதாவது,‘ அப்பா மில் தொழிலாளி பிளஸ் 2 தேர்வின் பொது உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார். அதனால் டிப்ளமோ படித்த அண்ணன் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். தம்பி 11-ம் வகுப்பு படித்து வருகிறான். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடங்கள் முடிந்து விட்டதால், தனியார் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. ஆண்டுக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் செலவாகும் என்பதால் கல்லூரியில் சேர முடியாமல் ஊர் திரும்பி விட்டேன்.  அதன் பின்பு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான செலவை அரசே ஏற்கும் என்று அறிவிப்பு வந்தது. அந்த சலுகையும் எனக்கு கிடைக்கவில்லை. தற்போது திருமண விழாக்களில் கேட்டரிங் வேலைக்கு சென்று கொண்டுள்ளேன். எனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

No comments