Breaking News

கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது-ஆட்சியர் கு.இராசாமணி தகவல்

 



பொள்ளாச்சி, டிச.8
 கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை  கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
 ஆய்வின்போது, உடன் பொள்ளாச்சி சார் - ஆட்சியர் வைத்திநாதன், உதவி இயக்குநர்   சீனிவாசன்(ஊராட்சிகள்), வட்டாட்சியர்கள் தணிகைவேல், வெங்கடச்சலம்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விவேகானந்தன், அசோகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் பலர் இருந்தனர்.
 கோவை மாவட்டத்தில் நகர்புற, கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப  மழைநீர் வடிகால், சாலைவசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட உட்கட்டமைப்பு  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், ஆச்சிப்பட்டி, சங்கம்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை  தரமானதாக அமைத்து,  விரைந்து முடிக்கவும், பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
இதுதவிர, பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
 செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கரோனா தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார பணிகள் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பும் குறைந்து உள்ளது. தினசரி 4000 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா பரிசோதனையில் 140 க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்படுகிறது. சில வாரங்களில் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது. ஆட்டோ, லாரி, பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை. கரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதுடன் முகக்கவசமும் அணிவதில்லை. இதனால் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உள்ளூர் நிர்வாகங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கவும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments