Breaking News

தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய ஆ.ராசா அதிமுக பற்றி பேச தகுதியற்றவர்-பொள்ளாச்சி வி.ஜெயராமன்

 



பொள்ளாச்சி,டிச.8.,
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய ஆ.ராசா, அதிமுக பற்றி பேச தகுதியற்றவர் என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம், ராசக்காபாளையம், புரவிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான கிராமப்புற மக்களுக்கு நாட்டுக்கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதில் சட்டப்பேரவை துணை த்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பங்கேற்று 534 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகளை வழங்கினார். உடன் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், வட்டாட்சியர் தணிகைவேல், தென்னை சாகுபடியாளர் சங்க செயலாளர் ஆர்.ஏ.சக்திவேல், ஒன்றியக்குழுத்தலைவர் விஜயராணி ரங்கசாமி, துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி,ஒன்றியக்குழு உறுப்பினர் காளீஸ்வரி உட்பட பலர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது... தமிழகத்தைச் சேர்ந்த சி. சுப்பிரமணியம், சண்முகம் செட்டியார் போன்றவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்கள். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஆ. ராசா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்து, ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தினார்.
 இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றியோ, அதிமுகவை பற்றியோ விமர்சனம் செய்வதற்கு எந்தவித தகுதியும் இல்லாதவர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதற்காகத்தான் விடுதலை செய்யப்பட்டுள்ளாரே தவிர குற்றமே செய்யவில்லை என்று நீதிபதிகள் சொல்லவில்லை. மேல்முறையீடு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகுதான் திமுகவின் நிலை  தெரியவரும்.
 குடிமராமத்து திட்டம் முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம். விவசாயிகளே இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் எந்த வகையில் ஊழல் நடைபெறுகிறது என்று ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும். மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவதுபோல் ஸ்டாலின் அவரது குடும்பத்தினர் ஊழல்வாதிகள். அவருக்கு தெரிந்ததெல்லாம் ஊழல்தான் என்றார். 

No comments