பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது - கனிமொழி எம்பி பேச்சு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது
பொள்ளாச்சி. ஜன.10.,
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையான முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திமுக மாநில மகளிர் அணி செயலாளர் எம்.பி கனிமொழி தலைமையில் பொள்ளாச்சி காந்தி சிலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், எம் பி சண்முகசுந்தரம்,
பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிர் அணி செயலாளர் எம்.பி.கனிமொழி பேசியதாவது...
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆளும் கட்சியினர் தடைபோட பல்வேறு முயற்சிகளை செய்தனர். கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஈச்சனாரி பகுதியில் என்னை உட்பட தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், சாலை மறியல் செய்து மீண்டும் அங்கிருந்து ஆர்ப்பாட்டத்திற்கு வந்துள்ளோம்.
இந்த ஆர்ப்பாட்டம் தேர்தலுக்கான ஆர்ப்பாட்டம் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவேண்டி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம். பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் முகவரியை போலீஸார் வெளியிட்டு மேலும் எந்த பெண்களும் புகார் கொடுக்க வரக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை பார் நாகராஜ் தாக்கி அச்சுறுத்தியுள்ளார்.
நடந்து செல்லும் பெண்களை புகைப்படம் எடுத்து மிரட்டி, செயினை பறிக்கும் செயலை பாலியல் குற்றவாளிகள் செய்துள்ளனர். பல பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிடமிருந்து பணம் பறித்துள்ளனர். பல பெண்களின் கொலைகள், தற்கொலைகளுக்கு இவர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். ஆளும்கட்சியினர் இந்த குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிப்பதுடன், குற்றங்களை மூடி மறைக்கின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் அதிமுகவிற்கு தொடர்பு இருக்கிறது என ஆதாரங்களை காட்டுமாறு கூறிவந்தார். ஆனால், தற்போது அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு ஆதாரம் வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஆதாரங்கள் வெளிவந்துகொண்டே இருக்கும்.
அதிமுகவின் அருளானந்தத்தை தாண்டி அவருக்கு மேல் உள்ள பல முக்கிய நபர்களை காப்பாற்ற முயற்சி நடைபெற்றுவருகிறது. சிபிஐ விசாரணைக்கு தடை ஏற்படுத்திவருகின்றனர் ஆளும்கட்சியினர். கருப்பர் இன தலைவர் ஆப்ரகாம்லிங்கனுடன் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவினர் ஒப்பிட்டு பேசியுள்ளனர்.
ஜாதி, மதங்களை வைத்து அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டும், விவசாயி என கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு எதிரான சட்டத்திற்கு ஆதரவு அளித்துவரும் எடப்பாடி பழனிச்சாமியை ஆப்ரகாம்லிங்கனுடன் ஒப்பிட்டு பேசியுள்ளனர்.
தனது பதவி பறிபோகாமல் இருக்க அமைச்சர்களை பாதுகாத்துவருகிறார் எடப்பாடிபழனிச்சாமி.
திமுக மீது வழக்குபதிவு செய்து அச்சுறுத்தினாலும் திமுக சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையான குற்றவாளிகள் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்களை கைது செய்யும்வரை திமுகவின் போராட்டம் ஓயாது. விரைவில் ஆட்சி மாற்றம்வரும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நீதியின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் மு, கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, முன்னால் எம்எல்ஏ பாலபாரதி, எம்எல்ஏ கார்த்திக் ஜெயராமகிருஷ்ணன், திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் தமிழ்மணி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டப் செயலாளர் நித்தியானந்தம், மதிமுக மாவட்டச் செயலாளர் குகன் மில் செந்தில், திமுக நகர துணை செயலாளர் கார்த்திகேயன், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி ராதிகா, காங்கிரஸ் மாவட்டத்தலைவர் பகவதி மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.





No comments