திருமூர்த்தி அணையிலிருந்து மூன்றாம் மண்டலத்திற்கு 5 சுற்றுக்கள் தண்ணீர் வேண்டும்- விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
திருமூர்த்தி அணையிலிருந்து மூன்றாம் மண்டலத்திற்கு 5 சுற்றுக்கள் தண்ணீர் வேண்டும்
விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
பொள்ளாச்சி, டிச.7
திருமூர்த்தி அணையிலிருந்து மூன்றாம் மண்டலத்திற்கு 5 சுற்றுக்கள் தண்ணீர் வழங்கவேண்டும் என விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் நீர்பகிர்மானம் செய்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் ஆழியாறு அணையிலிருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசன வசதிபெறுகின்றன.
இதில் திருமூர்த்தி அணையிலிருந்து நான்கு மண்டலங்காக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு 5 சுற்றுக்கள் தண்ணீர் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். பிஏபி தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவற்றை கணக்கிட்டு பிஏபி அதிகாரிகள் நான்கரை சுற்று தண்ணீர் வழங்கினர்.
இந்நிலையில், இந்த ஆண்டு மூன்று மற்றும் நான்காம் சுற்றுக்கு தண்ணீர் வழங்கவேண்டும். இதில் மூன்றாம் சுற்றுக்கு வரும் 11ம் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அத்துடன் பிஏபி தொகுப்பு அணைகளில் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு போதுமான அளவில் இருப்பதாகவும், மூன்றாம் மண்டல பாசன பகுதிகள் வறட்சியில் இருப் பதாலும், இனி வரும் காலங்களில் மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு இல்லை என்பதாலும் மூன்றாம் மண்டலத்திற்கு ஐந்து சுற்றுக்கள் தண்ணீர் வழங்கவேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் சார்பில் பிஏபி திட்டக்குழுத்தலைவர் மெடிக்கல் பரமசிவம் பிஏபி கண்காணிப்பு பொறியாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.


No comments