Breaking News

3ம் மண்டல பாசனத்திற்கு ஜனவரி 29 இல் தண்ணீர் திறப்பு



திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாசனத்திற்கு ஜனவரி 29ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 
பரம்பிக்குளம்- ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையிலிருந்து 50,000 ஏக்கரும், திருமூர்த்தி அணையில் இருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.
 திருமூர்த்தி அணையிலிருந்து நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஆறாம் தேதி உடன் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்படும். இந்நிலையில், திருமூர்த்தி அணை நீர்த்தேக்க திட்டக்குழு கூட்டம்
 பொள்ளாச்சி பி ஏ பி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இதில் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. திருமூர்த்தி அணை நீர்த்தேக்க திட்ட குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமை வகித்தார். நீர்ப்பாசன துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். பி ஏ பி கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர்கள் நரேந்திரன், சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். திட்ட குழு உறுப்பினர்கள் அருண், நித்தியானந்தம், நல்லதம்பி, குருசாமி, ஈஸ்வரன், ஈஸ்வரமூர்த்தி, தெய்வசிகாமணி, பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். 
மூன்றாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டி திட்டக்குழுவினர் அதிகாரிகளுக்கு மனு அளித்து கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர், இதை அடுத்து அதிகாரிகள் மற்றும் திட்ட குழுவினர் ஆலோசித்து ஜனவரி 29ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மொத்தம் ஐந்து சுற்று தண்ணீர் 10,300 மில்லியன் கன அடி வழங்கப்பட உள்ளது. இது தவிர அரசாணைப்படையும், நீதிமன்ற உத்தரவு படியும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டமலை அணைக்கு 240 மில்லியன் கன அடி 10 நாட்களில் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி, எம் பி ஈஸ்வர சாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி ஆகியோர் பரிந்துரையின் படி கிணத்துக்கடவு வடசித்தூர் அருகே உள்ள கோதவாடி குளத்திற்கும் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆகவே, கோதவாடி குளத்திற்கும் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.


No comments