விவசாயிகள் குறைதீர் கூட்டம்
 பொள்ளாச்சி சார் -ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமை வகித்தார். சார் -ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், வட்டாட்சியர் பட்டு ராஜா, பி ஏ பி திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு திட்ட குழு தலைவர் செந்தில், முன்னோடி விவசாயிகள் பட்டீஸ்வரன், ஆறுமுகம் உட்பட பல பங்கேற்றனர். 
கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள்... வரும் 7ம் தேதி திங்கள்கிழமை அன்று பி ஏ பி அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட தினம் கொண்டாட அரசு உத்தரவு வழங்கியுள்ளதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. திருமூர்த்தி அணை பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் அவர்களது மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தென்னை நார் தொழிற்சாலைகளால் பல இடங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. கிராமங்கள், நகரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. உப்பாறு பகுதி விவசாயிகளுக்கு பி ஏ பி பாசனப்பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் மட்டுமே தண்ணீர் வழங்க முடியும் என்று என்று பி ஏ பி விவசாயிகள் தெரிவித்தனர். ஆனைமலை பகுதிகளில் விரைந்து நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. நெல் கொள்முதலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. காட்டுப்பன்றிகளை தடுக்க வேண்டும், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும், அம்மை நோய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆனைமலை பழைய ஆயக்கட்டு காரப்பட்டி கால்வாய் பகுதிகளில் குடிநீர் திட்டங்களுக்காகவும், தனியார் திட்டங்களுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்ல சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. கேரளாவில் உள்ளது போன்று தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், இலவச மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் பதிலளித்து பேசினார். குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு விவசாயி பத்மநாபன் சார்பாக நீரா பானம் இலவசமாக வழங்கப்பட்டது.
 
No comments