Breaking News

தேங்காய் கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயிக்க விவசாயிகளிடம் கருத்து கேட்கவேண்டும். எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் மத்திய அரசுக்கு கோரிக்கை




தேங்காய் கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயிக்க புதிய விலை நிர்ணய கொள்கை முடிவெடுப்பதற்கு முன்பு பொள்ளாச்சி வருகை புரிந்து விவசாயிகளிடம் கருத்துகேட்க வேண்டும் என விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷன் தலைவருக்கு எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
 மத்திய வேளாண் அமைச்சக விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷன் தலைவர் விஜய்பால் சர்மாவிற்கு அனுப்பிய கோரிக்கை மனு விபரம்....நாட்டிலேயே தென்னை விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதியாக பொள்ளாச்சி உள்ளது. இதுதவிர பொள்ளாச்சியை சுற்றி கிணத்துக்கடவு, உடுமலை பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிகம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள தென்னை மரங்களில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 125 தேங்காய் உற்பத்தியாகிறது. தமிழகத்தின் வறண்ட மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி குறைவாக இருக்கும். தமிழக அரசு தேங்காய் உற்பத்தியை கணக்கிடும்போது, குறைந்த தேங்காய் உற்பத்தியாகும்  இடங்களில்  உள்ள புள்ளி விபரங்கள் அடிப்படையில் சராசரியாக 73 தேங்காய் விளைகிறது என்ற புள்ளிவிபரத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதால் அதன் அடிப்படையில் மத்திய அரசு கொப்பரை கொள்முதல் செய்கிறது. இதனால், தேங்காய்  உற்பத்தி அதிகம் நடைபெறும் பகுதியில் கொப்பரை கொள்முதலில் சிக்கல் ஏற்படுகிறது. தென்னை மரம் ஒன்றுக்கு ஆண்டு முழுவதும் 8 முறை தேங்காய் வெட்டலாம். ஆனால், ஒருமுறை வெட்டும் தேங்காயை மட்டும் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. நெல், கரும்பு போன்றவற்றை கொள்முதல் செய்வது போன்று தேங்காயையும் ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்யவேண்டும். கொப்பரை தேங்காய்க்கான குறைந்த  ஆதார விலையை ரூ.111.60ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தி வழங்கவேண்டும். கடந்த முறை கோவை மாவட்டத்திற்கு தாங்கள் ஆய்விற்கு வந்தபோது, விவசாயிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. அப்போது, தகவல் தெரிந்து நான் அங்கு வந்து உங்களை சந்தித்தபோது விரைவில் பொள்ளாச்சி வருகை புரிந்து தென்னை விவசாயிகளை சந்திப்பகாக தெரிவித்தீர்கள்.விவசாயிகளை சந்திக்க ஏற்பாடுகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இந்த ஆண்டு கொப்பரை தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலையில், புதிய விலை நிர்ணய கொள்கை முடிவெடுப்பதற்கு முன்பு  ஒருமுறை பொள்ளாச்சி வருகை புரிந்து விவசாயிகளிடம் கருத்துகேட்பு நடத்தவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













No comments