ஏழை மாணவர்களும் உயர் அதிகாரிகள் ஆக முடியும் பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் பேச்சு
அரசு கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும் திட்டமிட்டு முயற்சி செய்தால் அதிகாரிகளாக வாழ்க்கையில் உயர முடியும் என பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் கணேசன் பேசினார்.
பொள்ளாச்சி நகராட்சி சார்பாக கோட்டூர் சாலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கு நவீன வசதிகளின் கூடிய கூட்ட அரங்கு, அரசு தேர்வுகளில் வெற்றி பெற உதவும் பல்வேறு புத்தகங்கள் அடங்கிய நூலகம், இலவச கணினி சேவை உள்ளிட்ட வசதிகள் உள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று நகராட்சி சார்பாக வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுத்து, அறிவு சார் மையத்தில் வைத்து பயிற்சியும் வழங்கப்பட்டது. அப்போது, நகராட்சி ஆணையர் கணேசன் பேசியது...
பொள்ளாச்சி நகராட்சி சார்பாக செயல்பட்டு வரும் இந்த அறிவு சார் மையத்தில் அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு புத்தகங்கள் மற்றும் பொதுவான புத்தகங்கள் உள்ளன. மேலும் அரசு பணிகளில் சேர முயற்சி செய்வது குறித்து பயிற்சியும் அளிக்கப்படும். அரசு கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் பல்வேறு அரசு உயர் பதவிகளில் சேர இங்கு பயிற்சி வழங்கப்படும். மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
No comments