கனிம வள மாபியாக்களுக்குள் போட்டியா? கோவை பொள்ளாச்சிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு
கனிம வள மாபியாக்களுக்குள் ஏற்பட்ட போட்டியின் காரணமாக கோவை பொள்ளாச்சி பகுதிகளில் கனிம வள கொள்ளை குறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் விதிமுறை மீறி கொண்டு செல்லப்பட்டு வருகின்றன என்பது தொடர் புகாராக இருந்து வருகிறது.
கேரளாவில் கனிம வளங்களை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் குவாரிகள் குறைந்த அளவே செயல்படுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
தமிழகத்திலிருந்து செமணாம்பதி, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம், நடுப்பூணி, வேலந்தாவளம், வாளையார் போன்ற பல்வேறு வழித்தடங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இப்படி கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை விட கூடுதல் அளவுகளிலேயே கனிம வளங்களை ஏற்றி செல்வதாகவும், கனிம வளங்கள் ஏற்றி செல்லும் கனரக அதிவேகத்துடன் இயக்கப்படுவதாகவும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் போன்ற வாகனங்களில் செல்லும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் கனரக வாகனங்களை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்குவதாக தொடர் புகார்கள் உள்ளது.
கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை, தார்பாய்கள் கொண்டு கற்கள் மூடப்படுவதில்லை, இதனால் லாரிகளில் இருந்து பறக்கும் சிறிய துகள்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து விபத்து ஏற்படவும் காரணமாக அமைகிறது என்று கூறப்படுகிறது.
இப்படி தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனிம வள மாபியாக்களுக்குள் சமீபகாலமாக போட்டிகளால் மோதல் சூழல் உள்ளதாகவும் தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு தமிழக கேரளா எல்லையான செமணாம்பதி பகுதியில் கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுனர்களுக்குள் தகராறு ஏற்பட்டு லாரிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், செமனாம்பதி பகுதியில் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து மோதலில் ஏற்பட்டவர்களை பிடித்து ஆனைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுபோன்று கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் லாரிகள் பெரும்பாலும் கேரள பதிவு எண் கொண்டவையாகவும் உள்ளது. ஒரு சில வாகனங்கள் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகளும் உள்ளது. இதில் பெரும்பாலான லாரிகள் முறையான ஆவணங்கள் இன்றியே இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற 20 லாரிகளை பரிசோதனை செய்து அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கற்கள் ஏற்றி சென்றதை உறுதி செய்து அவற்றிற்கு ரூ. 13 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் விதிமுறை மீறு கனிமவள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சி கோபாலபுரம் வழித்தடத்தில் ராமபட்டினம் பிரிவு அருகே கற்கள் ஏற்றிக் கொண்ட லாரி அதிவேகமாக இயக்கப்பட்டு சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்படி விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் தமிழகத்தின் இயற்கை வளங்களை முறைகேடாக கேரளாவிற்கு கொண்டு செல்லும் மாபியாக்கள் மீதும், வாகனங்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எதனால் என்பது தெரியவில்லை.
இந்நிலையில் பொள்ளாச்சி, குறிச்சி மற்றும் கோவை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனிமவள கொள்ளை என்று குறிப்பிட்டு பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் திமுக ஆட்சியில் கனிம வளங்கள் எடுத்து அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் தொகைகள் பிரித்து வழங்கப்படுகிறது என்றும், எந்த ஆட்சி வந்தாலும் கனிம வளங்கள் கொள்ளை என்றும், கோவை மாவட்டத்தில் கல்வி குவாரிகளில் வசூல் வேட்டை தொடங்கவரும் மூவேந்தர்கள் என குறிப்பிட்டு சிலரின் புகைப்படங்களும், தற்போதைய அமைச்சர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, அழரின் செல்லப்பிள்ளை, கல்குவாரிகளில் கொள்ளையடிக்க வரும் கனிமவளத்துறை அமைச்சர்களே வருக என சிலரின் புகைப்படங்களும் போஸ்டர்களில் போட்டு ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக கனிம வள அரசர்களின் உத்தரவுகளை சிறப்பாக செயல்படுத்தும் கோவை கனிமவளத்துறை இணை இயக்குனர் விஜயராகவன் பணி சிறக்க வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கோவை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை யார் ஒட்டினார்கள் என்பது குறித்து தெரியவில்லை. ஒட்டப்பட்ட போஸ்டர்களை போலீஸார் கிழித்ததாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
என்ன போஸ்டர் ஒட்டினாலும் பொதுமக்கள் என்ன பாதிக்கப்பட்டாலும் கனிம வளங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இருக்கப் போவதில்லை என்றே பொதுமக்கள் புலம்புகின்றனர். கனிம வளங்கள் கொண்டு செல்வதில் மாஃபியாக்களுக்குள் போட்டிகள் ஏற்பட்டு தற்போது பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் தமிழகத்தின் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு எதிர்காலங்களில் தமிழகம் பாலைவனம் போல் மாறிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சோதனை சாவடிகளை கரெக்ட் செய்ய ஆட்களா? தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை சோதனை சாவடிகளை கடந்து கொண்டு செல்வதற்கு கேரளாவில் உள்ள அரசியல்வாதிகளும், தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகளும் அன்கோ செய்து கொண்டு கனிம வளம் மாபியாக்களுக்கு உதவி செய்வதாக கூறப்படுகிறது. அதில் கேரளத்தில் உள்ள அரசியல்வாதிகளின் பெயர்களையும் தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகளின் பெயர்களையும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
No comments