Breaking News

பரம்பிக்குளம் மதகுகள் புனரமைப்பிற்கு பிறகு முழு கொள்ளளவில் சோதனை ஓட்டம்




பரம்பிக்குளம் அணை மதகுகள் புனரமைப்பிற்கு பிறகு அணையின் முழு கொள்ளளவில் நீர் இருக்கும் போது சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
 பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டுள்ளன.
 பிஏபி திட்டத்தில் உள்ள 9 தொகுப்பு அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது பரம்பிக்குளம் அணை. இந்த அணை 17.82 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. கடந்த 2022 ஆம் ஆண்டில் பரம்பிக்குளம் அணையில் உள்ள இரண்டாம் எண் மதகு உடைப்பு ஏற்பட்டது. இதை அடுத்து 7 கோடி செலவில் மதகு புதுப்பிக்கப்பட்டது. 
தொடர்ந்து மதகு எண் 1 மற்றும் 3 புனரமைப்பு பணி கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. 24 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. மதகுகள் புனரமைப்பு பணியுடன் கியர்வீல்கள், சாப்ட், தொழில்நுட்ப பாலம் போன்ற புனரமைப்பு பணிகளும் நடைபெற்றன.
 இந்த பாலம் வழக்கமாக இரும்பால் செய்யப்படும். ஆனால், இந்த முறை கேம்ப்போ சீட் எனப்படும் துருப்பிடிக்காத பொருளால் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் கடந்த மாதம் முடிவடைந்து மதகுகள் சோதனை ஓட்டம் தண்ணீர் குறைவாக இருந்தபோது நடைபெற்றது.
 இந்நிலையில், பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் முழு கொள்ளளவு உள்ள நிலையிலும் மதகுகள் மற்றும் கியர்வீல்கள் என புனரமைப்பு செய்யப்பட்ட அனைத்தும் சீராக இயங்கியதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சோதனை ஓட்டத்தின் போது செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் தியாகராஜன்(பரம்பிக்குளம் அணை), உதவிப்பொறியாளர் சங்கீதா, கேரள நீர் பாசன துறை அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.
 அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மதகுகள் புனரமைப்பு பணிகள் நடைபெற்று சோதனை ஓட்டம் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments