முதல்வர் அறிவித்த திட்டத்தை பொள்ளாச்சியில் பயன்படுத்த முடியவில்லை. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேதனை
முதல்வர் அறிவித்த திட்டத்தை பொள்ளாச்சியில் பயன்படுத்த முடியவில்லை
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேதனை
நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுக்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்தும் ஆழியாறு அணை நிரம்பி வழியும் நேரத்தில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அதிகாரிகள் காலதாமதமாக அனுமதி வழங்கியுள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொள்ளாச்சி சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமை வகித்தார். சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரசகுமார், வட்டாட்சியர்கள், பலதுறை அதிகாரிகள், திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுத்தலைவர் மெடிக்கல்பரமசிவம், ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழுத்தலைவர் செந்தில், ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன சங்க நிர்வாகி பட்டீஸ்வரன், முன்னோடி விவசாயிகள் ஆறுமுகம், திப்பம்பட்டி ஆறுச்சாமி, அப்துல்கலாம் விவசாய சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் வைத்த முக்கிய கோரிக்கைகள்...
குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் இலவசமாக மண் எடுத்துக்கொள்ளலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். முதல்வர் அந்த திட்டத்தை அறிவித்து ஒரு மாதம் கடந்த நிலையில், தற்போது, ஏரிப்பட்டி குளம் மற்றும் ஆழியாறு அணையில் இருந்து மண் எடுக்க பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆழியாறு அணையில் முதல்வர் அறிவிப்பு வெளியிடும்போது தண்ணீர் குறைவாக இருந்தது. தற்போது தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேறிவரும் நேரத்தில் ஆழியாறு அணையில் மண் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுஅதிகாரிகளின் காலதாமத்தால் மண் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏரிப்பட்டி குளத்தில் மண்ணே இல்லை. ஆகவே அனைத்து நீர்நிலைகளில் மண் எடுக்க அனுமதிக்கவேண்டும்.
பொள்ளாச்சி தெற்கு பகுதியில் தொண்டாமுத்தூர் கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. இந்த குளம் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு காணப்படுகிறது. இந்த குளத்திற்கு 4 கி.மீ., தொலைவில் உள்ள பாலாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகி கேரளாவிற்கு செல்கிறது. ஆகவே பைப் லைன் அமைத்து பாலாற்றில் இருந்து தொண்டாமுத்தூர் குளித்திற்கு தண்ணீர் கொண்டுசெல்ல திட்டம் உருவாக்கவேண்டும். 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முறைப்படுத்தி விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தவேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணிகள் மேற்கொள்ளும்போது பிஏபி கால்வாய்களை உடைக்கின்றனர். திரும்ப அந்த கால்வாய்களை சரிசெய்வதில்லை.
பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை திட்டம் மிகவும் முக்கியமானதாகும். இந்த புறவழிச்சாலை திட்டத்திற்காக சாலை தோண்டப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால், அந்த வழியாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. ஆகவே அந்த பணியை விரைந்து முடிக்கவேண்டும். தண்ணீர் கொண்டு செல்ல பைப் லைன்கள் அமைப்பதில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுகிறது.
தென்னைநார் தொழிற்சாலைகள் பல விதிமுறைகளை பின்பற்றாததால் நீர்நிலைகள் மாசடைகின்றன. கோட்டூர் வேளாண்மைத்துறை அலுவலகம் எப்போதும் அதிகாரிகள் இன்றி பூட்டியே கிடக்கிறது. அரசு பயன்படுத்தும் மழைகளை கண்டறியும் ரேடார் கருவி 20 செ.மீட்டர் வரை மட்டுமே கண்டறியும் வகையில் உள்ளதால் அதிக மழைப்பொழிவை கண்டறியும் வகையில் மாற்றவேண்டும்.
மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகிவருவதால் தண்ணீரை சேமித்து தமிழகம் பயன்படுத்தும் வகையில் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை உருவாக்கவேண்டும். மேட்டுப்பாளையத்தில் மட்டுமே அரசு நாற்றுப்பண்ணை உள்ளதால் பொள்ளாச்சியில் நாற்றுப்பண்ணை அமைக்கவேண்டும். சாலைகளின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள செடிகளை அகற்றவேண்டும்.
ஆனைமலை பகுதியில் இருந்து பெரியபோதுவிற்கு3 இன்ச் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்கு அனுமதி வாங்கிவிட்டு 9 இன்ச் குழாய் பதித்து தண்ணீர் கொண்டு செல்வதாக குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்று விதிமுறை மீறி செய்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. குழாய் பதிக்கும்போது காரப்பட்டி கால்வாய் பாதையை முழுமையாக சேதம் ஆக்கிவிட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
No comments