Breaking News

பொள்ளாச்சி லதாங்கி பள்ளியை முற்றுகையிட முயற்சி. மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதாக புகார்


பொள்ளாச்சி லதாங்கி பள்ளியை முற்றுகையிட முயற்சி

மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவதாக புகார்

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களை பொள்ளாச்சி கோட்டாம்பட்டி லதாங்கி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் பாகுபாட்டுடன் நடத்துவதாக மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் பெற்றோர்கள் முற்றுகையிட முயன்றனர்.

 பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் கோட்டாம்பட்டியில் லதாங்கி வித்யா மந்திர் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப்பள்ளி கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களை பாகுபாட்டுடன் நடத்துவதாக தொடர் புகார் எழுந்தது.

 கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து பெற்றோர்கள், மாணவர்கள் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரையடுத்து, மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை சார்பில் மாணவர்களை பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது என அறிவுறுத்தல் சமீபத்தில் வழங்கப்பட்டதாக தெரிகிறது. 

ஆனால், தொடர்ந்து மாணவர்களை ஆய்வகம், சிறப்பு வகுப்புகள் மற்றும் பல வகையில் பாகுபாட்டுடன் நடத்தியாக கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில், சனிக்கிழமை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்திருந்தும் லதாங்கி சனிக்கிழமை செயல்பட்டதாகவும், அதற்கு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களை மட்டும் வரவேண்டாம் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்த தகவல் கிடைத்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் சனிக்கிழமை காலை லதாங்கி பள்ளியை முற்றுகையிட முயன்றுள்ளனர். 

தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பள்ளி நிர்வாகத்தினரை கண்டித்து மாணவர்களை பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது என தெரிவித்ததால் முற்றுகை முயற்சி கைவிடப்பட்டது. 

அரசு விடுமுறை நாளில் பள்ளி செயல்பட்டும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.

---

No comments