Breaking News

திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்


திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்



திமுக அரசை கண்டித்து எம்எல்ஏ எஸ்பி வேலுமணி தலைமையில் பொள்ளாச்சி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 3 முறை மின்கட்டணம் உயர்ந்து விட்டதாகவும், நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டுவரும் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை நிறுத்த முயற்சிப்பதாகவும் கூறி பொள்ளாச்சியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. 

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் செ.தாமோதரன், அமுல்கந்தசாமி, வி.பி.கந்தசாமி, அதிமுக நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது எஸ்பி வேலுமணி பேசியது...

மின்கட்டண உயர்வால் கோவை மாவட்டத்தில் தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.சொத்துவரி, பால் கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

மக்கள் நிலை பற்றி கவலைப்படாமல் ஒரு அரசு இருக்கிறது என்றால் அது திமுக அரசுதான். 40 மக்களவை தொகுதியிலும் வெற்றிபெற்று விட்டதால் திமுக மக்களைப் பற்றி கவலைப்படாது. வரும் சட்டப்பேரவை தேர்தல் நிலமை மக்களவை தேர்தல்போல் இருக்காது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா காட்டிய வழியில், எடப்பாடியார் ஆட்சி அமையும். 

2026 ல் கோவை மாவட்டத்தில் அதிமுக முழுமையாக வெற்றிபெறும். சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பது மக்களுக்கு தெளிவாகத்தெரியும். திமுக அரசு ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடைபெறுகிறது. 

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை தங்கள் பணியை சரியாக செய்யவேண்டும். மின்கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கட்டண உயர்வை திரும்பபெறவேண்டும். 

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளா ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை அரசு சரிசெய்யவேண்டும் என்றார்.

 ஆர்ப்பாட்டத்தின் போது, அதிமுக நிர்வாகிகள் விஜயகுமார், வால்பாறை அமீது, ஆர்.ஏ.சக்திவேல், கார்த்திக்அப்புச்சாமி, குருசாமி, கனகு உட்பட பலர் இருந்தனர்.

---






 

No comments