Breaking News

காட்டு யானை தாக்கி 2 கார்கள் சேதம்


காட்டு யானை தாக்கி 2 கார்கள் சேதம்
பொள்ளாச்சி, மார்ச்.13-ஆனைமலை புலிகள் காப்பகம் நவமலை சாலையில் காட்டு யானை தாக்கி இரண்டு கார்கள் சேதம் அடைந்தது. மின்வாரிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் காயமடைந்தார்.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்கள் ஆகவும், 6 வனச்சரகங்கள் ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், காட்டு மாடு பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு வால்பாறை சாலை, மூணார் சாலை, டாப்சிலிப் சாலை உள்ளிட்ட முக்கிய மூன்று சாலைகளும், பல்வேறு மின்சார வாரிய மின் உற்பத்தி நிலையங்கள் செல்ல சாலைகளும் உள்ளன. இந்நிலையில், ஆழியாரில் இருந்து நவமலை செல்லும் சாலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சரவணன் தனது காரில் சென்றுள்ளார்.
சரவணன் சென்ற கார் வெள்ளை நிற கார் என்பதால் நவமலை சாலையில் நின்றிருந்த ஒற்றை காட்டு யானை காரை தாக்கி தனது தந்தத்தால் பலமுறை உருட்டி உள்ளது. இதில், சரவணன் காருக்குள் சிக்கி காயமடைந்தார். சரவணன் காரில் செல்வதற்கு முன்பு மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் கருப்பு நிற காரில் சென்றுள்ளனர். அந்த காரையும் யானை தந்தத்தால் தாக்கி வனப்பகுதிக்குள் தள்ளியுள்ளது. இதில் அந்த காரில் சென்ற 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சென்று யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டு சரவணனை மீட்டுள்ளனர். கருப்பு நிற காரில் சென்றவர்களுக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. சரவணன் லேசான காயத்துடன் கோட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வனத்துறையினர் நவமலை சாலையில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிக்குள் வனத்துறையின் அனுமதி இன்றி இரவு நேரத்தில் யாரும் செல்லக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


No comments