Breaking News

மலைவாழ் மக்களை மிரட்டி கடன் வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள்


மலைவாழ் மக்களை மிரட்டி கடன் வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள்

பொள்ளாச்சி, ஜூலை.30-
 டாப்சிலிப்பில் மலைவாழ் மக்களை மிரட்டி நிதி நிறுவன ஊழியர்கள் கடன் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
 ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி, எருமைப்பாறை ஆகிய மலைவாழ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 200க்கும் அதிகமான குடியிருப்புகளில் 500க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்துவருகின்றனர். இங்கு வசித்து வரும் மலைவாழ் மக்களில்  யானை பாகன்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் போன்ற பணிகளில் 30க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். மீதமுள்ள மக்களில் பலர் வனத்துறையில் தற்காலிக அடிப்படையில் வனத்துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இப்படி பணி புரிபவர்களுக்கு வனத்துறையினர் வங்கி கணக்கில் ஊதியம் செலுத்திவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் அவசரத்தேவைகளுக்காக ஆனைமலை பகுதிகளில் உள்ள நிதி நிறுவனங்களில் பணம் பெற்றுவிட்டு அதிக வட்டி காரணமாக அதை திருப்பி செலுத்த முடியாமல் திணறிவருகின்றனர்.
 இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் டாப்சிலிப்பிற்கு வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள் மலைவாழ் மக்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். நிதிநிறுவனத்தில் பெற்ற பணத்தை வட்டியுடன் உடனே செலுத்தவேண்டும், இல்லாவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டியுள்ளனர். இவர்களின் மிரட்டல் சத்தம் கேட்டு அங்கு சென்ற வனத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், நிதிநிறுவன ஊழியர்கள் வனத்துறையின் அனுமதி பெறாமல் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்தது தெரியவந்தது. மேலும், டாப்சிலிப் வரும் பேருந்தில் வந்து இறங்கியதாகவும் தெரிவித்தனர். மலைவாழ் மக்களை மிரட்டியவர்களை உதவி வனப்பாதுகாவலர் செல்வம் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும், வனப்பகுதிக்குள் அனுமதியில்லாமல் அத்துமீறி நுழைந்தற்காக தனியார் நிதிநிறுவன ஊழியர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
மலைவாழ் மக்கள் கூறியது... கடந்த ஆண்டு அவசர தேவைகளுக்காக நாங்கள் ஆனைமலையில் உள்ள தனியார் நிதிநிறுவனங்களிடம் கடன்பெற்றுள்ளோம். அதை மாதம்தோறும் சரியாக திருப்பி செலுத்தியும் வருகிறோம். கரோனா காரணமாக வேலை இல்லாமல் வருமானம் இன்றி தற்போது தவித்துவருகிறோம். வெள்ளிக்கிழமை டாப்சிலிப் வந்த நிதிநிறுவன ஊழியர்கள் கட்டாயம் உடனே அனைத்து தொகையை செலுத்த வேண்டும் என மிரட்டுகின்றனர். இந்த நிதி நிறுவனம் தவிர வேறுசில நிதிநிறுவனங்களிலும் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் கடன்பெற்றுள்ளனர். அவர்களின் ஏடிஎம் கார்டுகள் நிதிநிறுவனங்களிடம் சிக்கி விட்டது. அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

No comments