Breaking News

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா

ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்


பொள்ளாச்சி, பிப்.27

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை குண்டம் இறங்கினர்.

 கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக அதிக அளவில் வந்து செல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும்  அம்மாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

 ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா விமர்சையாக நடைபெறும். தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்குவது வழக்கம்.

 இந்த ஆண்டு கடந்த 11ம் தேதி தை அமாவாசையில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 24ம் புதன்கிழமை நள்ளிரவு மயானபூஜை நடைபெற்றது. 25ம் தேதி காலை சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை நடைபெற்றது.
 26ம் தேதி காலை குண்டம் கட்டுதல் நடைபெற்றது. முறைதாரர்கள் குண்டம் கட்டும் பணியில் ஈடுபட்டு குண்டத்தை தயார் செய்து அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து மலர்தூவி மாலை அணிவித்தனர். 

மாலை 6 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தலும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெற்றது. 
 27ம் தேதி சனிக்கிழமை காலை அம்மன் அருளாளிகள் ஆழியாற்றில் நீராடிவிட்டு ஆழியாற்றங்கரையில் அருள் வந்து ஆடினர். அங்கு சென்ற பக்தர்கள் ஆற்றில் நீராவிட்டு அம்மன் அருளாளிகளிடம் குண்டம் இறங்குவதற்காக உத்தரவை பெற்றனர். சிலருக்கு அருளாளிகள் உத்தரவு தரவில்லை. 

அம்மன் அருளாளிகள் உத்தரவு கிடைக்காதவர்கள் குண்டம் இறங்க மாட்டார்கள்.
  அருளாளிகளிடம் உத்தரவு பெற்ற பக்தர்கள் அங்கிருந்து குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்து வரிசையில் காத்துநின்றனர். ஆற்றங்கரையில் இருந்து அருளாளிகள், முறைதாரர்கள் குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்து குண்டம் முன்பு தேரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்மனை வழிபாடுசெய்தனர். அதற்கு பிறகு குண்டம் இறங்கும் இடத்திற்கு சென்றனர். அப்போது, வானில் கருடன் மூன்று முறை வட்டமிட்டது. அதற்கு பிறகு முறைதாரர்கள் எலுமிச்சை கனி, பூ மாலையால் செய்யப்பட்ட பந்து ஆகியவற்றை குண்டத்தில் உருட்டிவிட்டனர்.

 அவைகள் வாடாமல் அப்படியே இருந்தது. தொடர்ந்து முறைதாரர்கள், அருளாளிகள் குண்டம் இறங்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். பெண்கள் குண்டம்  இறங்க அனுமதி இல்லாததால் கைகளால் பூ வை மூன்று முறை எடுத்து குண்டத்தில் மீண்டும் போட்டனர்.

குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியை பார்க்க பல்லாயிர கணக்கான பக்தர்கள் வந்திருந்ததால், டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 250க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவர் குழு, தீயணைப்பு துறையினர் போன்றவர்கள் தயார் நிலையில் இருந்தனர். குடிநீர், கழிப்பிட வசதி போன்றவையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

-----









No comments