ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
பொள்ளாச்சி. டிச. 15
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.
ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர், பொள்ளாச்சி என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, அமராவதி, உடுமலை என ஆறு வனச்சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம் பல்வேறு வகையான மான்கள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்துக்குப் பிந்தைய வன உயிரின கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வன உயிரின கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது.
திங்கள்கிழமை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்களிலும், மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ்சேவியர், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர்கள் புகழேந்தி, மணிகண்டன், நவீன் குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கணக்கெடுப்பு தொடங்கியது.
திருப்பூர் வனக் கோட்டத்தில், உதவி வனப்பாதுகாவலர் கணேஷ் ராம் முன்னிலையில் கணக்கெடுப்பு தொடங்கியது.
பொள்ளாச்சி வனக் கோட்டத்தில்மொத்தம் நான்கு வனச்சரகங்களிலும் 62 நேர்கோட்டுப் பாதையில் கணக்கெடுப்புகள் துவங்கின. இதில் மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகள் மற்றும் பல்வேறு வகையான உயிரினங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றன.
நேரில் பார்க்கும் வன உயிரினங்கள், வன உயிரினங்களின் கால்தடங்கள், எச்சம், நகக்கீறல்கள் போன்றவையும் கணக்கிடப்படுகின்றன. மேலும் வனப்பகுதிகளில் வன உயிரினங்களுக்கு ஏதாவது இடையூறுகள் உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்படுகிறது.
15ஆம் தேதி இன்று தொடங்கும் கணக்கெடுப்பு 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அறிவுறுத்தல் படி கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கணக்கெடுப்பில் புலிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
----
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
Reviewed by Cheran Express
on
January 14, 2021
Rating: 5
Reviewed by Cheran Express
on
January 14, 2021
Rating: 5




No comments