பொள்ளாச்சி அருகே பதுக்கி வைத்திருந்த 905 மானிய உரமூட்டைகள் பறிமுதல் -வட்டாட்சியர் தணிகைவேல் அதிரடி #Subsidized_Compost
பொள்ளாச்சி. ஜன. 18.,
பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மானிய விலை உரம் 905 மூட்டையை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரங்களை பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள சில நபர்கள் வாங்கி பெயர் மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் மானிய விலை உரங்களை வைத்து பல்வேறு உப பொருட்கள் தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மானிய விலை உரங்களை பதுக்கி வைத்திருந்த குடோன்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது
அதை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூரில் மானிய விலை உரத்தை பதுக்கி வைத்திருப்பதாக பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்திநாதன், பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சார்-ஆட்சியர் வைத்திநாதன், உத்தரவுப்படி வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையில் வருவாய்த்துறையினர் கோமங்கலம்புதூர் யுவபாரத்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 905 மூட்டை மானிய விலை உரம் இருப்பது தெரியவந்தது. அங்கு விசாரணை நடத்தியதில் மானிய விலை உரத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதை வேறு பெயர்களில் மூட்டைகளாக மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அந்த குடோன் உரிமையாளர் எஸ். மலையாண்டிபட்டினம் சேர்ந்த ராமசாமி ஆவார்.
ராமசாமியிடம் பொள்ளாச்சியை சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் குடோன் வாடகைக்கு எடுத்து மானிய விலை உரத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதை பெயர் மாற்றி வேறு மூட்டைகளில் அடைத்து அதிக லாபத்திற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, உரத்தை பறிமுதல் செய்த வருவாய் துறை அதிகாரிகள் வேளாண்மை துறையினரிடம் ஒப்படைத்தனர். குடோனுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் உரமூட்டைகளை ஏற்றவந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
மானிய விலை உரத்தை வேறு மூட்டைகளுக்கு மாற்றப்பட்டு அது கர்நாடகா மற்றும் கேரளத்திற்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.
மானிய விலை உரத்தை வாங்கி பெயர் மாற்றி அதிக லாபத்திற்கு விற்பனை செய்த மும்மூர்த்தி மற்றும் அதன் மேலாளர் சந்தோஷ் ஆகியோர் அதிகாரிகளை பார்த்தவுடன் தப்பி ஓடிவிட்டனர்.




No comments