அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட ஆறு குழந்தைகள் உடல் நல பாதிப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் வழக்கம் போல் மதிய உணவு சாப்பிட்டு உள்ளார்கள்.
இந்நிலையில் ஒரு சிலர் திடீரென வாந்தி வருவதாக அங்கன்வாடி மைய காப்பாளரிடம் கூறியுள்ளனர். பின்பு இந்த குழந்தைகள் வாந்தியும் பேதியும் ஏற்பட்டு நிலையில் மயக்கம் அடைந்துள்ளனர்.
இதன்பிறகு அங்கன்வாடி மையக்காப்பாளர் தனியார் வாகன மூலம் குழந்தைகளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
பின்பு குழந்தைகளுக்கு ஏற்பட்ட வாந்தி மயக்கம் காரணமாக அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையலரிடம் விசாரணை மேற்கொண்டு உணவுகளை ஆய்வு செய்ததில் உணவில் பல்லி விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்து வந்ததாக கூறியும், 108 ஆம்புலன்ஸில் அழைத்து வராமல் தனியார் வாகனத்தில் ஏன் அழைத்து வந்தீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆறு குழந்தைகள் நலமுடன் இருப்பதாகவும் குழந்தைகள் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அங்கன்வாடி மையத்தில் பணியில் அஜாக்கிரதையாக இருந்த சிவகாமி மற்றும் செல்வநாயகி ஆகிய இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா தெரிவித்துள்ளார்.
No comments