பொள்ளாச்சியில் போதை ஊசி விற்பனை செய்தவர் கைது
பொள்ளாச்சியில் போதை ஊசி விற்பனை செய்தவர் கைது
பொள்ளாச்சி வெங்கடேசா காலனி மற்றும் கல்லூரிகள் அருகே போதை ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் ரத்தினகுமார், உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது வடுகபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே இருப்புப் பாதை அருகே ஒரு நபர் போதை ஊசிகளை சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.
பின்பு உடனடியாக அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பொள்ளாச்சி அருகே உள்ள சூழேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் (எ) சுதாகரன் (45) என்பதும், இவர் கடந்த பல வருடங்களாக கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் இருந்து போதை ஊசிகளை வாங்கி வந்து இப்பகுதியில் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பின்பு அவரிடம் இருந்த 355 மருந்து குப்பிகள் மற்றும் 15 ஊசிகளை கிழக்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து பாஸ்கரன் (எ) சுதாகரனை காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இவர் ஏற்கனவே போதை ஊசிகளை விற்பனை செய்து கைது செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் வேறு யாராவது இது போன்ற போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டு உள்ளனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments