Breaking News

நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டு



நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ரூ. 72 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள் நோயாளிகள் கட்டண பிரிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

 உடன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி, எம்பி ஈஸ்வரசாமி, சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா, நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திமுக நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகராட்சி துணைத்தலைவர் கௌதமன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது...

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இந்தத் திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் செயல்பாட்டில் இல்லை. இது தவிர பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.

 தமிழ்நாட்டில் இன்றைக்கு ஒரு புதிய முயற்சியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் முதன்முறையாக உள் நோயாளிகள் பிரிவு கட்டண அறைகள் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. ரூ 1,000 கட்டணத்தில் அதிதீவிர சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.

 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஏற்கனவே 19 இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

  24 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வரும் சிறப்பான சிகிச்சையால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

 நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம். நீட் தேர்வில் இந்த ஆண்டு முறைகேடு நடைபெற்றுள்ளது.

 ஹரியானாவில் ஒரே மையத்தில் மட்டும் ஏழு பேர் 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளது முறைகேடுக்கு உதாரணமாக உள்ளது. மேலும் பல்வேறு குழப்பங்களும் உள்ளது. நீட் தேர்வு குழப்பம் உள்ளதால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது என்றார்.


No comments