Breaking News

ஓடையில் கொட்டப்படும் கழிவுகள்

ஓடையில் கொட்டப்படும் உணவக கழிவுகள் 
பொள்ளாச்சி அடுத்த நா.மூ.சுங்கம் பகுதியில் மாடு ஏத்தி பள்ளம் என்ற ஓடையில் உணவகங்களின் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகின்றன. 
பாலாற்றின் துணை நதியாக இருப்பது மாடு ஏத்தி பள்ளம் என்ற ஓடை. இது கோபால்சாமி மலை அடிவாரத்தில் இருந்து வரும் புண்ணிய தீர்த்தமாகும். இந்த ஓடை நா.மூ.சுங்கம் பகுதியில் பாலாற்றில் கலக்கிறது. இந்த பாலாற்றில் இருந்து குடிநீர், விவசாயம் மற்றும் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் தீர்த்தமாகவும் பயன்பட்டு வருகிறது. ஆனால் நா.மூ. சுங்கம் பகுதியிலிருந்து உடுமலை சாலையில் மாடேத்தி பள்ளம் ஓடை குறிக்கிடுகிறது. நா.மூ. சுங்கத்திலிருந்து ஓடை மிக அருகிலேயே இருப்பதால் அங்கு செயல்படும் உணவகங்களில் இருந்து உணவு கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இது தவிர, பல்வேறு தரப்பினரும் கழிவுகளை ஓடை அருகிலிலும், ஓடையிலும் கொட்டி விட்டு செல்கின்றனர். இந்த கழிவுகளுடன் வரும் நீர் பாலாற்றில் கலக்கிறது. இதனால், பாலாற்று தண்ணீரும் மாசுபடுகிறது. இந்த பாலாறு அம்பராம்பாளையம் பகுதியில் ஆழியாற்றில் வந்து கலக்கிறது. அந்த இடத்தில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. இதனால், அந்த குடிநீரை குடிக்கும் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடை மற்றும் ஓடை அருகில் குப்பை கொட்டாமல் பாதுகாப்பதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

No comments