விஆர்டி அரசு பள்ளியில் கலையரங்கம் திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஆனைமலை விஆர்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் வரவேற்றார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலையரங்கத்தை திறந்து வைத்தார். எம்பி ஈஸ்வரசாமி வாழ்த்துரை வழங்கினார். சார் -ஆட்சியர் கேத்தரின் சரண்யா, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மகேஸ்வரி, டிஎஸ்பி ஸ்ரீநிதி, திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்க குமார், அரசு கூடுதல் வழக்கறிஞர் தேவசேனாதிபதி, திமுக நிர்வாகி சபரி கார்த்திகேயன், பொள்ளாச்சி திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஆனைமலை திமுக நகர செயலாளர் செந்தில்குமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது....
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் நன்றாக கல்வி பயில வேண்டும் என்பதற்காக முதல்வர் முக்கியத்துவம் வழங்கி வருகிறார். அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் பாடம் நடத்துவதற்கு முன்பு ஆசிரியர்கள் பயிற்சி எடுத்து விட்டு தான் பள்ளியில் பாடம் நடத்துகிறார்கள், ஆகவே ஆசிரியர்கள் கூறுவதை மாணவர்கள் கேட்டு நடக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது, சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் திறமையை உடையவர்களாக இருப்பார்கள்.
மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி படித்து முன்னேற வேண்டும். சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். சந்தேகத்தை தீர்க்கும் இடமாக பள்ளி இருக்கும். உயர்கல்வி செல்ல உள்ள மாணவர்கள் தமிழகம் மற்றும் இந்திய நாட்டின் கல்லூரிகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆண் பிள்ளைகள் படித்தால் குடும்பம் நன்றாக இருக்கும், பெண் பிள்ளைகள் கல்வி பயின்றால் சமுதாயம் முன்னேறும் என்றார்.
No comments