நீரேற்று நிலைய பராமரிப்பு ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
ஆழியாறு அணையை ஆதாரமாகக் கொண்டு பொள்ளாச்சி நகராட்சி, பல்வேறு பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்றவற்றிற்கு நீரேற்று நிலையங்கள் மூலமாக குடிநீர் எடுத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நீரேற்று நிலையங்களில் பணி நிரந்தரமான ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் உள்ள உள்ளதாக தெரிகிறது. ஒப்பந்த அடிப்படையில் ஆன பராமரிப்பு ஊழியர்கள், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், பராமரிப்பு உதவியாளர் என 96 பேர் உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.12,600 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் கடந்த ஓராண்டாக ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், ஒப்பந்ததாரர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இவர்கள் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை முறையாக நடத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. மேலும் ஊதிய உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் உள்ளது. இந்நிலையில் 295 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம், கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டம், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி கூட்டுக்குடிநீர் திட்டம், குறிச்சி- குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய நீரேற்று நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சனிக்கிழமை காலை முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நீரேற்று நிலையம் முன்பாக அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், குடிநீர் வினியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் பேச்சு நடத்தி ஊழியர்களின் குறைகளை சரி செய்து குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments